அம்மா கிளினிக் ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டம்
வேலூர், பிப்.1-
அம்மா மினி கிளினிக்கில் பணியாற்றிய பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும், பணியில் இருந்து திடீரென விடுவித்ததாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகமெங்கும் அம்மா மினி கிளினிக் எனப்படும் திட்டம் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் துவங்கி வைக்கப்பட்டது. இந்த மினி கிளினிக்குகள் போதிய செயல் திறன் இல்லாததால் மூடப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார்.
இந்நிலையில், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோருக்கான ஒப்பந்தத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது.
இச்சூழலில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்கில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும், பணியில் இருந்து திடீரென விடுவித்ததாகவும் கூறி சுமார் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் முன்பு இன்று (ஜன 31) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் சத்துவாச்சேரி காவல் ஆய்வாளர் கருணாகரன் நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொடர்ந்து சுகாதாரத்துறை இணை இயக்குனரை போராட்டகாரர்கள் சந்தித்தனர். மேலும் அவர் அளித்த உத்திரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
No comments
Thank you for your comments