Breaking News

போலி சான்றிதழ்.... உதவி பேராசிரியர் கைது

வேலூர்:


போலி சான்றிதழ் கொடுத்து  திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள் உதவி பேராசிரியர் பணியாற்றியது குறித்து  பல்கலைக்கழக பதிவாளர் எஸ்பியிடம் புகார்  செய்ததை அடுத்து போலி சான்று அளித்து பணியில் இருந்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்... 

வேலூர் மாவட்டம், காட்பாடி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் 2010 ஆம் ஆண்டு முதல் காட்பாடி அடுத்த  சேர்க்காட்டில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.


இவர் பணியில் சேரும்போது அனுபவ சான்றிதழ் பல்கலைகழக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. அப்போது பன்னீர்செல்வம் 1999 ஆண்டுமுதல் 2004 ஆண்டு வரை ஏவி.வி. எம்  கல்லூரியில் பணி புரிந்ததாகவும்,  தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2004 - 2006 ஆண்டு வரை பணி புரிந்ததாகவும் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இந்தச் சான்றிதழ்கள் போலியாக தயார் செய்யப்பட்டது போல் உள்ளதாக பல்கலைக்கழக பதிவாளருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க பல்கலைக்கழக பதிவாளர் சையது சஃபி உத்தரவிட்டுள்ளார்.


அதைத்தொடர்ந்து அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக அவரே தயார் செய்தது என்பது தெரியவந்துள்ளது. பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் சையது சஃபி புகார் அளித்துள்ளார்.

புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். 

இது குறித்து கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் உதவிப் பேராசிரியர் பன்னீர்செல்வம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் தலைமறைவாகி இருந்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பன்னீர்செல்வத்தை வலைவீசி தேடி வந்த நிலையில் காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டில் இருந்த பன்னீர்செல்வத்தை மடக்கிப் பிடித்தனர்.

அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

போலியான சான்றிதழ் தயாரித்து  தமிழக அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் 9 ஆண்டுகள்  பணிபுரிந்த உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

No comments

Thank you for your comments