Breaking News

73-வது குடியரசு தின விழா: 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர்ண கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி:

73-வது குடியரசு தின விழாவில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர்ண கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார். 

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காலை 10.20 மணிக்கு அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு வந்தார்.

அங்கு ஏற்கனவே மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருந்தனர். அவரை தொடர்ந்து மெய் காப்பாளர்களின் அணிவகுப் புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடைக்கு வந்தார். அவரை குடியரசு தலைவரின் மெய்காப்பாளர்களுக்கு தலைவரான கர்னல் அனுப் திவாரி தலைமை தாங்கி அழைத்து வந்தார்.



பின்னர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

இந்திய ராணுவத்தின் கம்பீரத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பு டில்லி ராஜபாதையில் துவங்கி, இந்தியா கேட் வரை நடந்தது. 

முதலில் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை வீரர்கள் குடியரசு தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.  இதை தொடர்ந்து ராணுவத்தின் டாங்கிகள் தாங்கிய வாகனம் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சென்னை ஆவடியில் தயாரான அர்ஜூன் ரக பீரங்கி உட்பட 1965, 1971 போரில் பயன்படுத்திய டாங்கிகள் மற்றும் தற்போதைய நவீன ஆயுதங்களும் இடம்பெற்றன.

இதை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் 6 படைப்பிரிவு அணிவகுப்பு நடைபெற்றது. அசாம் ரெஜிமெண்ட், ஜம்மு காஷ்மீர் லைட் ரெஜிமெண்ட், சீக் லைட் ரெஜிமெண்ட், பாராசூட் ரெஜிமெண்ட் , மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். 

இதையடுத்து 'நாங்கள் பாதுகாப்போம்' என்ற வாசகத்துடன் கடலோர காவல்படை வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ஆஞ்செல் ஷர்மா தலைமையிலான 96 இளம் மாலுமிகள் இடம்பெற்றனர்.

இதன்பின் 96 விமானப்படை வீரர்கள், 4 அதிகாரிகள் கொண்ட விமானப் படை அணிவகுப்பு நடைபெற்றது. மிக்-21 , ரபேல் விமானங்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர் அணிவகுப்பில் பங்கேற்றன. தேசிய கொடியின் மூவர்ண பொடிகளை தூவியவாறு போர் விமானங்கள் பறந்தன. விமானப்படை வீரர்கள் மேகக் கூட்டங்களுக்கு இடையே நேர்த்தியாக சாகசம் நிகழ்த்தினர்.

போரின் போது இக்கட்டான சூழலில் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் இருசக்கர வாகன வீரர்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ரூபேந்திர சிங் சவுகான் தலைமையில் என்.சி.சி வீரர்கள் கம்பீர அணிவகுப்பும், பரையா ஷிதி ரமேஷ் தலைமையிலான என்.எஸ்.எஸ் வீரர்கள் அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த அணிவகுப்புக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பஞ்சாப், உத்தர பிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் ஊர்திகள் இடம்பெற்றன.

இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் கலாசார நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் தொடங்கி இந்திய கேட் வரை சென்றது. 

முன்னதாக ஜம்மு- காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை கொன்று வீர மரணம் அடைந்த பாபுராமுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அதை அவரது மனைவி ரினா ராணி, மகன் மாணிக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்களை  குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த வழங்கினார்.

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு 24 ஆயிரம் பார்வையாளர்களே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அணிவகுப்பில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

குடியரசு தின விழாவின் போது ராஜபாதையில் 75 மீட்டர் நீளமும், 15 அடி உயரமும் கொண்ட 10 ஓவியத்திரைகள் முதன் முறையாக காட்சிப்படுத் தப்பட்டன. அவை சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

கலை நிகழ்ச்சிகளை அனைவரும் சிறந்த முறையில் பார்ப்பதற்காக ராஜ பாதையின் இரு புறமும் தலா 5 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

குடியரசு தின அணிவகுப்புக்கு முன்பு ராணுவத்தினர் தொடர்பான குறும்படங்கள் முந்தைய குடியரசு தின விழா அணி வகுப்பு காட்சிகள் உள்ளிட் டவை திரையிடப்பட்டன.

குடியரசு தின விழா கொண்டாட்டங்களை பிரசார் பாரதி நேரலையில் ஒளிபரப்பியது.

இந்த நிகழ்ச்சிகளின் நிறைவையடுத்து குடியரசுத் தலைவர் சிறப்பு படை சூழ மாளிகைக்கு திரும்பினார். அவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்

No comments

Thank you for your comments