ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம்
ஈரோடு, ஜன.20-
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டுமையம் அமைப்பதற்கான பணியினை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, கருங்கல் பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (20.01.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, அவர்கள் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டுமையம் அமைப்பதற்கான பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு துறையிலும் பொது மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். பல புதிய திட்டங்களை உருவாக்குவதில் மிகுந்த வேகத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் நம்முடைய மாவட்டத்திற்கு பெரிதும் அக்கறை காட்டி நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 10.01.2022 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 40,095 பயனாளிகளுக்கு ரூ.209.77மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை காணொலி காட்சி வாயிலாக வழங்கினார்கள். அதனடிப்படையில் தொடர்ந்து மூன்று தினங்கள் பொது மக்களுக்கு இந்நலத்திட்ட உதவிகள் நேரில் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ரூ.104.81 கோடி மதிப்பீட்டில் 66 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.45.15 கோடி மதிப்பீட்டில் 365 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அதற்கு பின்னால் வந்த மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்துவருகிறார். மேலும் தமிழக சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகதுறையின் மானிய கோரிக்கை அறிவிப்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில் அறிவுசார் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினம் (20.01.2022) நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஸ்மார்ட் சிட்டிதிட்டத்தின் கீழ், ஈரோடு மாநகராட்சியில் ரூ.6.17 கோடி மதிப்பீட்டில் இளைஞர்கள் மேம்பாட்டிற்கென பிரித்தியேகமான திறன் மேம்பாட்டு மையம் அமைக்க பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் அமைக்கப்படவுள்ள இளைஞர் மேம்பாட்டு மைய கட்டிடம் மூன்று தளங்களுடன் மொத்தம் 1538 சதுரமீட்டர் பரப்பில் கட்டப்பட உள்ளது. மேற்கண்ட இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மின்னனு நூலகம், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சி மையம், வேலைவாய்ப்பு போட்டித் தேர்விற்கான பயிற்சி மையம், இளைஞர்களின் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான ஆலோசனைமையம், தொழில் நுட்பதிறன் மேம்பாட்டு பயிற்சி மையம் போன்ற பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும், மேற்கண்ட இளைஞர் மேம்பாட்டு மையம் அமைப்பதன் மூலம் ஈரோடு நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் ஒரு இலட்சம் இளைஞர்கள் பயன்பெற்று அவர்களின் வாழ்க்கைதரம் உயரும். இம்மேம்பாட்டு மையம் அமையப்பெற்றால் அவர்களது திறன் மேம்படுவதுடன் வாழ்க்கை தரமும் உயரும். இம்மையம் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் உதவி பொறியாளர் சோமசுந்தரம் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கௌசிக் அன் கோ நிறுவனத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!
No comments
Thank you for your comments