ஜல்லிக்கட்டு விழா -2022 நடைபெறும் மைதானத்தை நேரில் ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா -2022 நடைபெறும் மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைக்கப்பட்ட மைதானத்தில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு வரும் நிலையில், ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாக நடத்திடவும், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, உத்தேசமாக வருகின்ற 21ம் தேதி அரசின் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், போட்டியினை உள்ளூர் தொலைக்காட்சிகள், மற்றும் வலைதளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பு செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
இவ்விழாவில் கலந்து கொள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு என தனித்தனியே தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உடன் வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றுடன், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மாடுகளுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது எனவும், ஏற்கனவே பதிவு செய்த மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments