தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல் – அமைச்சர் மா.சு.,
சென்னை
அ.தி.மு.க., ஆட்சியில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (4-1-2022) கூறியுள்ளார்.
சென்னை பெரியார் திடலில் இன்று சித்தா கோவிட் சிகிச்சை மையம் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது, அமைச்சர் சேகர்பாபு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டன.
கடந்த ஆட்சியில், ஓராண்டு தற்காலிக அடிப்படையில் தான் அந்த கிளினிக்குகள் திறக்கப்பட்டன. செவிலியர்கள் இல்லாமல் இயங்கி வந்த அம்மா கிளினிக்குகள் மூடப்பட்டதுடன், அங்கு பணிபுரிந்த 1,820 டாக்டர்களும் கோவிட் பணியில் உள்ளனர். இவர்களும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மார்ச் 31 வரை கோவிட் பணியில் ஈடுபடுவார்கள். அந்த திட்டம் முடிந்து விட்டது.
மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் பயனடைந்தவர்களின் தரவுகள் உள்ளன.
அம்மா மினி கிளினிக் மூலம் பயனடைந்தவர்கள் பட்டியலை தர முடியுமா? தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட திட்டம் அம்மா மினி கிளினிக் திட்டம்.
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாமல் இருந்தால், அவர்கள் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு, டாக்டர்கள் அறிவுறையுடன் சிகிச்சை பெறலாம்.
2 முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்துவிட்டால் அவர்கள் வெளியில் வரலாம்.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
No comments
Thank you for your comments