Breaking News

ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்! - வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி...

தூத்துக்குடி, ஜன.11-

தூத்துக்குடி அருகே சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியை அடுத்த புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டதில், தூத்துக்குடி போல்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் ராக்கேஷ் என்பவருக்கு சொந்தமான ஹரிபாலகிருஷ்ணா ஆட்டோமொபைல்ஸ் மற்றும் லாரி யார்டு பகுதியில், மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான லாரியில், சுமார் 15 முதல் 20 டன் எடை கொண்ட, சுமார் 10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செம்மரக்கட்டைகளை பார்வையிட்டார். 

இந்த செம்மரக் கட்டைகள் ஆந்திரா பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு துறைமுகம் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்ததாக முதற்கட்ட  தகவலில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

No comments

Thank you for your comments