காஞ்சிபுரம் மாவட்டப் பகுதியில் முதலமைச்சர் நேரில் ஆய்வு ... மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்
சென்னை
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த போரூர், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், தனலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (4.12.2021) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதலமைச்சர் அவர்களுடன், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முதல் அனைத்துத் துறைச் செயலாளர்கள், அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் களத்தில் நின்று அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவதாலும், பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாலும் வெள்ளப் பாதிப்புகள் துரிதமாக சீர்செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று காலை (4.12.2021) கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல், போரூர் ஏரி கலங்கல் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மௌலிவாக்கம், மாங்காடு சுரங்கப்பாதை பகுதியில் போரூர் ஏரியின் உபரிநீர் வாய்க்காலில் கனமழையால் ஏற்பட்ட மழைவெள்ள நீர்வரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர் சாலைப் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் மற்றும் தேவைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
தனலட்சுமி நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பாதிப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அப்பகுதியில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் எல். சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments