பாபிரெட்டிபட்டி அருகே தேனீக்கள் கொட்டியதில் கிராம நிர்வாக அலுவலர் பலி
பாப்பிரெட்டிப்பட்டி :
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தேனீக்கள் கொட்டியதில் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் (38) உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சிவக்குமார். இவர், குருபரஹள்ளியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில், அந்த ஊரில் மூதாட்டி ஒருவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் வழிப்பிரச்னை இருந்ததாம். இந்த பிரச்சனை குறித்து களஆய்வு செய்தவற்காக விவசாய நிலப்பகுதி வழியாக அவர் நடந்து சென்றுள்ளார். அந்தப் பகுதியில் ஏற்கனவே, மலைத் தேனீக்கள் கட்டியிருந்த தேன் கூட்டினை யாரோ கலைத்துவிட்டு சென்றிருந்தனராம்.
இதையடுத்து, அந்த வழியாக சென்ற கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரை 100 க்கும் மேற்பட்ட தேனீக்கள் கொட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலருக்கு மனைவி ஜெயபிரதா உள்ளார். இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments
Thank you for your comments