Breaking News

இன்று அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழா

ஈரோடு, டிச. 14: 

ஈரோடு கோட்டையில் கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதேசி விழாவையொட்டி இன்று அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.  காலை 6 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.  



கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு   அதன்படி, பொதுமக்கள் கோயில் அலுவலகத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள  மூங்கில் சாரத்தின் தனி வழியில் நுழைந்து  ராஜகோபுரம் வழியாக வந்து  பரமபத வாசலில் நுழைந்து  திருவேங்கடமுடையான், சக்ரத்தாழ்வார், நரசிம்மரை தரிசனம் செய்தனர். 

பின்னர் கோயிலை சுற்றி வந்து பின் பகுதியில் உள்ள ஹயக்ரீவர், தன்வந்திரி, விஷ்வசேனரை தரிசனம் செய்து, கமலவல்லி தாயார் சன்னதிக்கு சென்று, அங்கு தாயாரை வெளியில் நின்று தரிசனம் செய்து பின், விழா மண்டபத்தில் உள்ள உற்சவர் மற்றும் பெருமாள் திருவடிகளை தரிசனம் செய்து, இரும்பு மேம்பாலத்தில் ஏறி, மூலவர் கோபுர கலசத்தையும், ராஜகோபுர கலச்சத்தையும் தரிசித்து, பின் மேம்பாலத்தில் இருந்து கிழே இறங்கி கருவறைக்குள் சென்று மூலவரை தரிசனம் செய்துவிட்டு  வெளியில் வரும் வழியில் ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்து கோயிலில் இருந்து வெளியேறும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்டத்தை குறைக்கவும், கோயிலில் கூட்டமாக நிற்கவும், அமரவும் அனுமதியில்லை. மேலும், பக்தர்களுக்கு தலையில் பெருமாளின் சடாரி வைக்கப்பட மாட்டாது, துளசி தீர்த்தம், பிரசாதம் வழங்கப்படாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் நேற்று மாலை முதலே ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பிற போலீஸ் ஸ்டேஷன் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார், ஊர் காவல்படை போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments