பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு
புதுடெல்லி:
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர். அமெரிக்கா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குன்னூரில் ராணுவ நடைமுறைகள் முடிந்தபின்னர் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறது. டெல்லியில் உள்ள ராவத்தின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் ராவத்தின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்படடு டெல்லி கன்டோன்மென்டில் அடக்கம் செய்யப்படும்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு இக்கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழப்பு தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை விளக்கம் அளிக்க உள்ளார்.
No comments
Thank you for your comments