Breaking News

பயணிகள் ரயில்களை இயக்க கோரி சீசன் டிக்கெட் பயணிகள் உண்ணாவிரதம்...

ஈரோடு:

ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்களை இயக்க கோரி ஈரோட்டில்  சீசன் டிக்கெட் பயணிகள் உண்ணாவிரதம்... 


ஈரோட்டிலிருந்து   தினமும் திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பொதுமக்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், வியாபாரிகள்  என ஆயிரக்கணக்கானோர் ரயில் மூலம் வேலைக்கு சென்று வருகின்றனர். 

ஈரோட்டில் இருந்து கோவைக்கு பஸ்களில் செல்லும் போது பஸ் கட்டணமாக ரூ.83 செலவழிக்க வேண்டி உள்ளது.  ஆனால் அதே வேளையில் பயணிகள் ரயிலில் சீசன் டிக்கெட் எடுத்து பயணித்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.350 மட்டும் செலவழித்தால் போதும். எனவே பெரும்பாலோனோர்  ரயில்களில் பயணித்து வருகின்றனர்.  

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.  சில மாதங்களுக்கு முன்பு தொற்று பரவல் குறைந்ததையடுத்து மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. 

ஆனால் ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரெயில், ஈரோடு பாலக்காடு ரெயில், ஈரோடு சேலம் செல்லும் ரயில் ஆகிய 3 பயணிகள் ரயில்களும் மட்டும் தொடர்ந்து இயக்கப்படாமல் உள்ளது.  

இதனால் தொழிலாளர்கள் பஸ்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சார்பில் பல முறை ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. 

இதனிடையே இக்கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு சீசன் டிக்கெட் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் ஈரோட்டில் ரயில்நிலையம் அருகே   உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

 போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான்சன், செயல் தலைவர் விக்ரம், செயலாளார்  மகாலிங்கம், பொருளாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான பயணிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments