Breaking News

பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் - குரல் கொடுக்கும் குமார்..

தருமபுரி :

ஆந்திரமாநிலத்தில் மர்மமான முறையில் இறந்த சித்தேரியைச் சேர்ந்த பழங்குடியின தொழிலாளி மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு வலியுறுத்தல்..

மாவட்ட செயலாளர் அ.குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் தலைமை தாங்கினார். 

மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் அரசியல் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அ.குமார் அறிக்கை சமர்பித்தார்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் ,பருத்தி, மஞ்சள், மரவள்ளி, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து ஆய்வு மேற்கொண்டு மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மாவட்டம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாகச் செப்பனிட வேண்டும்.

விவசாயிகள் சாகுபடி செய்ய உதவியாக கூட்டுறவு சங்கங்களில் எவ்வித நிபந்தனையுமின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இவ்வாண்டு அரவையைத் தொடங்கவேண்டும், மின்சார உற்பத்தி திட்டப் பணிகளையும் செயல்படுத்த வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

சமீபத்தில் சித்தேரி மலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் ஆந்திராவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நீதி கிடைக்க வகை செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் .கூலி வேலைக்காக ஆந்திரா சென்று பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

மதுரையில் இருந்து மொரப்பூர் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் 

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments

Thank you for your comments