குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 26 பேர் உட்பட195 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
கடந்த 21.11.2021 அன்று ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்தவர்களான 1) மாரியம்மாள் (46),க/பெ. பண்டாரசாமி, அவரது கணவர் 2) பண்டாரசாமி (48), த/பெ. பாலு மற்றும் 3) மாடசாமி (எ) பாசி (44), த/பெ. இசக்கி ஆகிய 3 பேரையும் ஏரல் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான மாரியம்மாள், பண்டாரசாமி மற்றும் மாடசாமி (எ) பாசி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா அவர்களும்,
கடந்த 23.11.2021 அன்று எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்வதற்காக கடத்திச் சென்ற வழக்கில் சுஜீவன் (எ) சந்தோஷ் (22) த/பெ. முருகையா, பாப்பாத்தி அகதிகள் முகாம் மாசார்பட்டி, என்பவரை எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி சுஜீவன் (எ) சந்தோஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் ஏரல் சிவகளை பகுதியை சேர்ந்தவர்களான 1) மாரியம்மாள், க/பெ. பண்டாரசாமி, அவரது கணவர் 2) பண்டாரசாமி, த/பெ. பாலு, 3) மாடசாமி (எ) பாசி, த/பெ. இசக்கி மற்றும் 4) சுஜீவன் (எ) சந்தோஷ் த/பெ. முருகையா, பாப்பாத்தி அகதிகள் முகாம் மாசார்பட்டி ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, எதிரிகளில் மாரியம்மாள் என்பவரை மதுரை பெண்கள் தனி சிறையிலும், மற்ற 3 எதிரிகளை பாளையங்கோட்டை சிறையிலும் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 26 பேர், கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் உட்பட 195 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
No comments
Thank you for your comments