Breaking News

இந்தியாவில் நுழைந்தது ஓமிக்ரான் வைரஸ்..... 2 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி, டிச.2-

இந்தியாவிலேயே முதன்முறையாகக் கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இருப்பது, மரபணு வரிசைப்படுத்தல் முறை சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் இருந்தால் போதும் என்று மத்திய நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து, கடந்த நவம்பர் மாதம் பிற்பகுதியில், கர்நாடக மாநிலம் பெங்களூர் வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், இருவரும், ஓமிக்ரான் பரவிய தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்ததால், இருவரும், முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு பகுப்பாய்வு முறையிலான கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதில், இருவருக்கும் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக, மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ஓமிக்ரான் உறுதியாகியுள்ள இருவரும் ஆண்கள் என்றும், ஒருவருக்கு 66 வயது என்றும், மற்றொருவருக்கு 46 வயது என்றும் கூறியுள்ளார்.

இதுவரை 29 நாடுகளில் 373 பேருக்கு ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள மரபணு வரிசைப்படுத்தல் முறை ஆய்வகத்தில் சோதனை செய்ததில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

கர்நாடகாவில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவருக்கும், தீவிரமான கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், லாவ் அகர்வால் தெரிவித்தார்.

ஓமிக்ரான் உறுதியாகி உள்ள இருவரோடு, விமானங்களில் பயணித்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும், கூறினார்.

ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குச் சோதனை செய்து, அவர்களுக்கு கொரோனா இருந்தால் முறைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டாலும் 7 நாள் வீட்டுத் தனிமையில் வைக்க வேண்டும் என்றும், மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

ஓமிக்ரான் அச்சுறுத்தல் குறித்து, அச்சப்பட வேண்டியதில்லை என்றும், அதே நேரத்தில், மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

உருமாறிய டெல்டா வைரஸ், ஸ்பைக் புரோட்டினில் 9 வகையில் தான் உருமாற்றம் அடைந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனா வைரஸ் ஸ்பைக் புரோட்டீனில் அதிகளவாக 32 வகைகளில் உருமாற்றம் அடைந்திருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஙி.1.1.529 என்ற உருமாறிய ஓமிக்ரான் கொரோனோ வைரஸ், உருமாறிய டெல்டா வைரசை விடவும் அபாயகரமானது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

டெல்டா வைரசின் மரபணு மாற்ற தொடர்ச்சி என்று கூற இயலாத வகையில், தீவிர உருமாற்றங்களுடன், ஓமிக்ரான் வைரஸ் புதிய வடிவம் எடுத்துள்ளதாகவும், மருத்துவ உலகம் குறிப்பிட்டுள்ளது. 

கொரோனா தொற்று விவரம்

கர்நாடக மாநிலத்தில்

கர்நாடக மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த இரண்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது அவர்களுக்கு ஒமைக்கிரான் தொற்று இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்களை சுற்றியுள்ள கொரோனவைரஸ் மரபணுச் சோதனை இன்சாகோக் மூலம் செய்யப்பட்டது.

அந்த சோதனையில் அவர்களுக்கு ஒமைக்கிரான் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளன.

அவர்கள் கர்நாடக மாநிலத்தில் தொடர்புகொண்டு உள்ளவர்களின் உடல்நிலை சோதனை செய்யப்பட்டுள்ளது அவர்களுக்கும் ஆர்டி பிசி ஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி

புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின் பிரான்சில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 243 பேரில் மூன்று பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வந்த 195 பயணிகளில் ஒருவருக்கு கொரானா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேருடைய மாதிரிகளும் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தெலுங்கானா

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மூலமாக ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய முப்பத்தி ஐந்து வயது பெண் ஒருவருக்கு செய்த சோதனையில் சோதனை முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் ரத்தம் மரபணு சோதனைகளுக்காக இன்சாகோக் அமைப்புக்கு  அனுப்பப்பட்டுள்ளது என்று தெலுங்கானா பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஜி ஸ்ரீனிவாச ராவ் கூறினார். முடிவுகள் கிடைக்க மூன்று நாட்கள் ஆகும் என அவர் தெரிவித்தார்.

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் இருபத்தி ஏழு மாணவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் இருவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டனர் அவர்களுக்கு தொடர்ந்து நடந்த சோதனையில் கொரானா தொற்று உறுதியானது.

அதனால் அந்தப் பள்ளியின் மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்களுக்கும் சோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது அதில் மொத்தம் 27 மாணவர்களுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments