2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும்- ராமதாஸ்
சென்னை, டிச.29-
2026 ஆம் ஆண்டில் பாமக தலைமையில் கூட்டணிக்கு அமைக்க வரும் கட்சிகளை வரவேற்போம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்
பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு, சென்னை கடற்கரையருகே உள்ள அண்ணா கலையரங்கில் இன்று (29-12-2021) நடைபெற்றது.
இந்த பொதுக்குழுவில் கலந்துகொணடு பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது.
2026ஆம் ஆண்டு பாமக தான் தமிழகத்தை ஆள வேண்டும். பாமக தலைமையிலான கூட்டணி அமைக்கவேண்டும், இனி வரும் காலத்தில் பாமக தலைமையில் கூட்டணியை ஏற்றுக்கொள்ளும் எந்த கட்சியானாலும் வந்தால் வரவேற்போம், உள்ளாட்சித்தேர்தலில் பதவியைப் பிடிக்க அதிமுக, திமுகவுடன் பேரம் பேச யார் யார் நினைக்கிறார்களோ செயல்படுகிறார்களோ அவர்களை எல்லாம் கண்காணிக்க உளவுப்படை அமைப்போம்.
கடந்த காலத்தில் அப்படிப்பட்டவர்களை மன்னித்தோம், இனி அந்த நிலை இருக்காது, பதவிக்கும் பணத்திற்கும் விலை போகிறவர்களை களையெடுப்போம்,
பாமகவை விட்டு சிலர் தாவுகிறார்கள் அவர்களுக்கு இப்போது சென்ற இடத்தில் ராஜ மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். போகப் போகத்தான் அவர்களின் மரியாதை தெரியும். அவர்களையெல்லாம் போனால் போகட்டும் போடா என்று தான் கருதுவேன், துரோகம் செய்பவர்கள் கட்சி பதவியில் ஒரு நாள் நீடிக்கமாட்டார்கள் அவர்களை எங்களது உளவுப்படை கண்காணித்து களையெடுப்பார்கள் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக்குழுவில் கலந்துகொணடு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது -
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டோம், எனினும் நமக்கு வெற்றிகிடைக்க வில்லை. இப்போது களம் காலியாக இருக்கிறது, எதிர்காலத்தில் திமுக வெற்றிபெறாது, பாமகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்கிறது, எங்களுக்கு பதவி ஆசை இல்லை. நாம் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எங்களது முதல் இலக்கு, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான், தொலைநோக்கு பார்வையோடு தமிழகத்திற்கு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வோம், அத்தனை திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது, ஒருமுறை அதிகாரத்தை கொடுத்து பாருங்கள் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றி காட்டுவோம், என்று பேசினார்.
தீர்மானங்கள்
இதைத்தொடர்ந்து பாமக சிறப்பு பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டில் பாமக தலைமையிலான கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் பாமக ஆட்சியை அமைக்க வேண்டும்என்றும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,
மேலும் நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஒப்புதல் பெற்று, 2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக சட்டப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும்,
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்! என்றும் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்தும் சட்டத்தை விரைவாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, முன்னாள் எம்.பி. செந்தில், பாமக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலு, பொதுசெயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,
No comments
Thank you for your comments