நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,985 வழக்குகளுக்கு தீர்வு!
நாமக்கல், டி.14-
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார்.
நீதிபதிகள் பாலசுப்பிரமணியம், நந்தினி, சுந்தரையா, சரவணன், ஸ்ரீவித்யா, முருகன், மாலதி, ரேவதி, விஜய் அழகிரி, தமயந்தி, ஜெயந்தி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், பிரியா மற்றும் வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இதில் விபத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள் மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கு சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் (பொறுப்பு) ஸ்ரீவித்யா செய்து இருந்தார். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி கோர்ட்டிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் மொத்தமாக 6,571 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.18 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரத்து 133 செலுத்தி சமரசம் செய்யப்பட்டது.
No comments
Thank you for your comments