Breaking News

நாகலாந்தில் துப்பாக்கிச் சூடு பொதுமக்கள் 13 பேர் பலி

கவுகாத்தி, டிச.5-

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்திற்குட்பட்ட திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குச் சென்று கெண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் தொழிலாளர்களைப் பயங்கரவாதிகள் என நினைத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதில் 13 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தின் மியான்மர் எல்லையை ஒட்டிய மோன் மாவட்டத்தில் பங்கரவாதிகள் எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஓடிங்-திரு கிராமத்திற்கு அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஓடிங்-திரு கிராமத்திற்கு சென்ற பாதுகாப்புப் படையினர், அங்கு ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்த ஒடிங் மற்றும் திரு கிராம தொழிலாளர்களை பயங்கரவாதிகள் எனக் கருதி அவர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.   இதில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்புப் படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிகிறது. இதனால், தற்பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினர் மக்களை நோக்கி சுட்டதாகவும், இதில் கிராம மக்கள் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படையினரின் மூன்று வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகலாந்து முதல்வர் நைபியு ரியோ, இது துரதிர்ஷ்டவசமான சம்பவம், வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன். உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு  விசாரணை செய்து சட்டத்தின்படி நீதி வழங்கும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா:  துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தை கேள்வி பட்டு வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ள அமித்ஷா, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.   இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு  நியமித்துள்ள உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

ராணுவமும் விசாரணை:  இந்த சம்பவம் தொடர்பாக ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.    இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்த நம்பகமான உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், நாகாலாந்து, மோன் மாவட்டம், ஓடிங்-திரு பகுதியில் நடத்தப்பட்ட  துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. 

"இந்த சம்பவத்தில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்."  

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் பலத்த காயம் அடைந்த தாகவும், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. 

நாகாலாந்தில் பதற்றத்தைத் தணிக்க இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.


No comments

Thank you for your comments