Breaking News

தமிழகத்தில் மீண்டும் மேல்சபை! ஆவலுடன் எதிர்நோக்கும் திமுக சீனியர்கள்...

சென்னை:

திமுகவின் சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான ஒன்றாக எதிர்பார்க்கப்படுவது சட்டமன்ற மேலவை (சட்ட மேல்சபை) மீண்டும் உருவாக்கப்படும் என்பதுதான். தமிழகத்தில் மேல்சபையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நியமன பதவிகளிலாவது திமுகவுக்காக அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக உழைத்து, சிறைவாசம் அனுபவித்து இன்னமும் பிரதிபலன் பாராமல் ஓடிக் கொண்டே இருக்கும் மூத்தவர்களுக்கு அங்கீகாரம் தரப்படுமா? என்பது திமுகவினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு. 

நாட்டில் 6 மாநிலங்களில்தான் சட்டமன்ற மேலவை தற்போது நடைமுறையில் உள்ளது. 1986ம் ஆண்டு தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோதுதான் இந்த சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டதன் பின்னணியில் சுவாரசியமான சர்ச்சை வரலாறும் உண்டு. 

 மேலவை கலைப்பு -  சுவாரசியமான சர்ச்சை வரலாறு

தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தின் மேலவை  “தமிழ் நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” (Tamil Nadu Legislative Council) என்றழைக்கப்பட்டது. தமிழ் நாட்டின் முன்னோடி மாநிலங்களான சென்னை மாநிலம் மற்றும் சென்னை மாகாணத்தின் சட்டமன்றங்களிலும் “மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்ற பெயரில் மேலவையாக இருந்ததும் இதுவே. 1861 இல், பிரிட்டிஷ் அரசு, இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஐ இயற்றியதன் மூலம் இந்த அவையை உருவாக்கியது. ஆரம்பத்தில் சென்னை ஆளுனருக்கு பரிந்துரை வழங்கும் அவையாகவே இது இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம், 1892 இன் மூலம் இதன் உறுப்பினர் எண்ணிக்கையும் பொறுப்புகளும் அதிகரித்தன. 1909 ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினர்கள் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாயினர். 1920-1937 இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்தபோது மாகாணத்தில் ஓரங்க சட்டமன்றமாக இந்த அவை செயல்பட்டது. 1937 இல் மாநில சுயாட்சி முறை அறிமுகப் படுத்தப்பட்டு, சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறியபோது அதன் மேலவையாகச் செயல்பட்டது.

1947 இல் இந்தியா விடுதலையடைந்து 1950 இல் குடியரசு நாடானது. புதிய இந்திய அரசியலமைப்பின் கீழ் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் சென்னை மாநிலத்தின் (பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணம், இந்தியக் குடியரசில் சென்னை மாநிலம் என்று வழங்கப்பட்டது) ஈரங்க சட்டமன்றத்தின் மேலவையாக நீடித்தது. இந்த அவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத நிரந்தர அவையாக இருந்தது. மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தது. 1952-53 காலகட்டத்தில் அது 72 ஆக இருந்தது. அக்டோபர் 1, 1953 இல் ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் 51 ஆகக் குறைந்தது. 1956 இல் 50 ஆகக் குறைந்த உறுப்பினர் எண்ணிக்கை 1957 இல் மீண்டும் உயர்ந்து 63 ஆனது. அதன் பின்னர் 1986 இல் மேலவை கலைக்கப்படும் வருடம் உறுப்பினர் எண்ணிக்கை 63 ஆகவே இருந்தது. உறுப்பினர்களுள் கீழவையும் உள்ளாட்சி அமைப்புகளும் தலா 21 பேரைத் தேர்ந்தெடுத்தன; ஆசிரியர்களும், பட்டதாரிகளும் 6 பேரைத் தேர்ந்தெடுத்தனர். மீதமுள்ள 9 பேர் அமைச்சரவையின் பரிந்துரைக்கேற்ப ஆளுநரால் நியமிக்கப்பட்டனர்.  மேலவை தன்னிச்சையாகச் சட்டங்களை இயற்றும் உரிமை பெற்றிருக்கவில்லை. கீழவையால் நிறைவேற்றப்பட்ட சட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உரிமை மட்டுமே அளிக்கப்பட்டிருந்தது. இரு அவைகளுக்கும் முரண்பாடு ஏற்படுமெனில் கீழவையின் முடிவே இறுதியானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னை மாநிலம் “தமிழ் நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, மேலவையின் பெயரும் “தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்” என்று மாற்றப்பட்டது.

1986 இல் எம்.ஜி.ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாடு சட்டமன்ற மேலவையை கலைத்தது. எம்ஜியார் தமிழ்த் திரைப்பட நடிகையான வெண்ணிற ஆடை நிர்மலாவை அதிமுக சார்பில் மேலவைக்கு நியமனம் செய்ய முடிவு செய்தார். ஏ. பி. சாந்தி என்ற இயற்பெயர் கொண்ட நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நிர்மலா முன்பு ஒருமுறை திவாலானவர். இந்திய அரசியலமைப்பின் 102-(1)நீ பிரிவின் படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ மாநில சட்டமன்றங்களின் உறுப்பினராகவோ ஆக முடியாது. ஏப்ரல் 21 ஆம் தேதி, எஸ். கே. சுந்தரம் என்ற வழக்கறிஞர் இதனைக் குறிப்பிட்டு நிர்மலாவின் நியமனத்தை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றைத் தாக்கல் செய்தார். நிர்மலாவின் கடன்களை அடைப்பதற்காக எம்ஜியார் அதிமுக கட்சி நிதியிலிருந்து 4,65,000 ரூபாய்களை கடனாக நிர்மலாவுக்கு அளித்தார். இதன் மூலம் நிர்மலாவின் திவால் நிலையை மாற்ற முயன்றார்.  சென்னை மாநில நகரங்கள் திவால் சட்டம் 1909 இன் 31 ஆம் பிரிவின் படி, கடன்களை முழுமையாக அடைத்துவிட்ட ஒருவரின் திவால் நிலை நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென நிர்மலாவின் வழக்கறிஞர் சுப்ரமணியம் பிச்சை வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி, நிர்மலா திவாலானவர் அல்ல என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு நிர்மாலாவின் நியமனத்தை செல்லும்படியாக்கியது. ஆனால் திடீரென நிர்மலா தனது வேட்புமனுவை திருப்பிப் பெற்றுக் கொண்டார். இந்தச் சம்பவம்குறித்து சென்னை ஆளுநர் சுந்தர் லால் குராணா முதல்வர் எம்ஜியாரிடம் எப்படி திவாலான ஒருவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று விளக்கம் கேட்டார். 


இதனால் கோபம் கொண்ட எம்ஜியார் மேலவையைக் கலைக்க உத்தரவிட்டார்.  சட்டமன்ற மேலவையை கலைக்க மே 14 ஆம் தேதி கீழவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை (நீக்கம்) சட்டம், 1986 இல் நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 30, 1986 இல் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது. நவம்பர் 1, 1986 இல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்து சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது


2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தேர்தல் அறிக்கையில் கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் அமைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் 1989, 1996 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற போதும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அப்போதெல்லாம் மேலவையை மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய ஆதரவில்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. திமுக அரசுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிமுக அரசுகள் திமுக வின் தீர்மானங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன. 

2006 இல் மு. கருணாநிதி ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வரான பின் அதற்கான பணிகள் தொடங்கின. மே 24, 2006 இல் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் ஆளுநர் உரையில் மேலவையை மீண்டும் கொண்டுவர சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என்ற குறிப்பு இடம் பெற்றிருந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 12, 2010 இல் தமிழக சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மே 4, 2010 இல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைச் சட்டம், 2010 ஐ நடுவண் அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.  அடுத்த இரு நாட்களில் அந்தச் சட்டம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  30 செப்டம்பர் 2010 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் மேலவை தொகுதிகள் பட்டியலை வெளியிட்டார்.  மேலவையை மீண்டும் அமைப்பதற்கான பணிகள் நடந்தன. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரான பின்னர், இம்மீட்டுருவாக்கம் கைவிடப்பட்டது.

திமுக தேர்தல் வாக்குறுதி-2021

இந்த சூழ்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 374-வது வாக்குறுதியாக தமிழகத்தில் மீண்டும் மேல்சபை கொண்டு வரப்படும் என்று கூறி இருந்தனர். அதில், அரசியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் இடம்பெற்று அரிய ஆலோசனை கூறத்தக்க வகையில் தமிழகத்தில் மீண்டும் சட்டமன்ற மேல்சபையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருந்தது.



தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதும் முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் மேல்சபையை கொண்டுவர தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பிலும் மேல் சபையை கொண்டுவர அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி வருகிற சட்டசபை கூட்டத்தொடரின் போது இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் சட்டசபை கூட்டம் முடிந்துள்ளதால் அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் கூடும் என தெரிகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்க இருக்கும் இந்த கூட்டத்தொடரின்போது மேல்சபையை கொண்டு வருவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  இதற்காக சட்ட நிபுணர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு வருகின்றன. 

ஏற்கனவே உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மேல்சபை உள்ளது. அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மேல்சபையை கொண்டு வருவதற்கான மசோதா நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேல்சபையை கொண்டு வருவதற்கான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும்போது அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தாலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனென்றால் மேல்சபை அமைப்பதற்கு பா.ஜனதா தேர்தல் வாக்குறுதியில் ஆதரவு தெரிவிக்கும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் மேல்சபையை கொண்டு வரும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யும் போது பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்காது என தெரிகிறது.

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த முறை இந்த சட்ட மசோதா எளிதாக நிறைவேறும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் மேல்சபையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த முறை எப்படியும் சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்றே தெரிகிறது. அப்படி சட்டமேலவை கொண்டுவரப்படும் போது கல்வியாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் என துறைசார் வல்லுநர்கள் இடம்பெறுவர். அவர்களுடன் திமுகவில் இதுவரை அங்கீகாரம் கிடைக்காமல், கட்சி நலன் கருதி மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும் பல சீனியர்களுக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.

பொதுவாக தேர்தல் களத்தில் பொருளாதாரம் மற்றும் ஜாதிய பலம் ஆகியவற்றின் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் இது போன்ற நியமனப் பதவிகளில் கட்சிக்காக நெடுங்காலம் உழைத்து கொண்டிருக்கும் கொள்கை பற்றாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுவது மரபு. அந்த மரபை இப்போதும் பின்பற்றி கட்சிக்காக எந்த பிரதிபலனும் பார்க்காமல் உழைத்து கொண்டு அத்தகைய மூத்தவர்களுக்கு ஒரு அங்கீகாரமாக இத்தகைய நியமன பதவிகளை வழங்க வேண்டும். பொதுவாகத் தேர்தல் களத்துக்குப் போகிறவர்களும் வெல்வதும் தோற்பதும் இயல்பு. அவர்களுக்கான வாய்ப்புகளும் அங்கீகாரமும் அடுத்தடுத்து வந்து கொண்டுதான் இருக்கும். அதைப்பற்றி கடைகோடி தொண்டன் பொதுவாகப் பெருமிதப்படுவதில்லை. ஆனால் கட்சிக்காக உழைத்துக் கொண்டே இருக்கும் கொள்கையாளர்கள், மூத்தவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரங்களை வழங்கும் போதுதான் அந்த கடைக்கோடி தொண்டன் தமக்கு கிடைத்ததைப் போல ஒரு மகிழ்வை வெளிப்படுத்துவான்; கட்சி மீதான பற்றுதலும் அவனது செயல்பாடுகளும் உத்வேகம் பெறும்.... இதனை திமுக தலைமை கவனத்தில் கொள்ளுமா? என்பது எதிர்பார்ப்பு.

No comments

Thank you for your comments