தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - சர்ச்சையை கிளப்பிய சென்னை ஐஐடி
சென்னை:
சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை புறக்கணித்தது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணித்து தமிழ் மொழியை புறக்கணிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு குறுக்கு வழிகளில் செயல்பட்டு எதிர்ப்பு கிளம்பியதும் திருத்திக்கொள்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாகி உள்ளது.
அவ்வகையில் சென்னை ஐஐடி நிர்வாகத்தின் 58வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று (நவ.,20) இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இந்த விழாவின் போது, வந்தே மாதரமும், தேசிய கீதமும் மட்டுமே ஒலிபரப்பி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை புறக்கணித்திருக்கிறார்கள். இதுபோக, ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்ற மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வு தற்போது சர்ச்சையை கிளப்பியதோடு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அதன்படி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணியும் ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், “சென்னை ஐஐடி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்து - ‘‘நீராரும் கடலுடுத்த’’ என்ற மொழி வாழ்த்துப் பாடாமல் புறக்கணித்துள்ளனர். வேறு ஏதோ ஒன்று நுழைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Thank you for your comments