தத்தளிக்கும் தலைநகரம்... ! முழுவீச்சில் மீட்பு பணிகள்... !!
சென்னை, நவ.9-
வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8-11-2021) இரண்டாவது நாளாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறின்றி மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் 6.11.2021 அன்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை 7.11.2021 அன்று முதலமைச்சர் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (8.11.2021) சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில், கனமழையால் வெள்ளநீர் வடியும் பக்கிங்ஹாம் கால்வாயை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்யாணபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரத் திரையரங்கம் ரவுண்டானா பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசி, பால், ரொட்டி, பாய், போர்வை, துண்டு போன்ற நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர், ஆர்.கே. நகர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி, பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். தொடர்ந்து, கொடுங்கையூர், மீனாம்பாள் சாலையில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடம் முதலமைச்சர் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, அவற்றை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முல்லை நகர், பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், மகாகவி பாரதியார் நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். இறுதியாக அன்னை சத்யா நகரில் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி, மழைநீர் தேங்கியுள்ள குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் மின்மோட்டார் பொருத்திய படகுடன் மூன்று மீனவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிட 200 பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதை மற்றும் சாலைகளில் தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றரை இலட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். மூர்த்தி, தாயகம் கவி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதனிடையே சென்னை பெரம்பூர் மகாகவி பாரதி நகரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், புது மணத்தம்பதியினரை அழைத்து வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரே தங்களை நேரில் வாழ்த்தியதை தொடர்ந்து அத்தம்பதியர் உற்சாகமடைந்தனர். மழைநீரின் ஊடே நடு ரோட்டில் முதலமைச்சர் காலில் விழுந்தும் ஆசி பெற்றனர்
தமிழகத்தில் நடைபெற்று வரும் வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 15.62 மி.மீட்டர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.13 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 128 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 71 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 79 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36 பேரும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தீயணைப்புத் துறை, அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்புத் துறைக்கு சுவர் இடிந்து விழுந்தது. மழை நீர் சூழ்ந்து, பாம்புகள் தென்பட்டது, மரம் விழுந்தது, வாகனங்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது போன்ற 261 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மூலம் 90 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு 87 ஹெலிபேட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments
Thank you for your comments