மத்திய குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான மத்திய ஆய்வு குழுவினர் இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் தேங்கியது. விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் பயிர்கள் அழுகின.
தமிழகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையில் மத்திய அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை (21-11-2021) சென்னைக்கு வந்தது.
மத்தியக் குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து கடந்த 2 நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதில் ராஜிவ் சர்மா தலைமையிலான குழு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களையும், அடுத்த நாள் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆர்.பி.கவுல் தலைமையிலான குழு தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களையும், அடுத்த நாள் வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வு பணிக்கு பின்னர், மத்திய உள் விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிவ் சர்மா, ஒன்றிய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் விஜய் ராஜ்மோகன், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் மண்டல அலுவலர் ரனன் ஜெய் சிங், ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் சார்புச் செயலாளர் எம்.வி.என். வரபிரசாத், ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி. கவுல், ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் இயக்குநர் ஆர். தங்கமணி. எரிசக்தித் துறை உதவி இயக்குநர் பவ்யா பாண்டே ஆகியோர் இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வு குறித்து மத்தியக் குழுவினர் முதலமைச்ரிடம் சந்தித்து மழை பாதிப்பு கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
மத்தியக் குழு உறுப்பினர்கள் சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிருவாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments