Breaking News

ஜெ.வின் வேதா இல்லம் அரசுடமை சட்டம் ரத்து... 3 வாரம் கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 3 வாரங்களுக்குள் இந்த இல்லத்தை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசியல் தொடர்பாக அனைத்து சந்திப்புகள் மற்றும் தனது அரசுப்பணிகளை இந்த இல்லத்தில் இருந்து கவனித்து வந்தார். 

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி  உடல் நலக்குறைவு காரணமாக  ஜெயலலிதா மரணமடைந்தார்.  

அதன்பிறகு அவரது நினைவாக சென்னை மெரினாவில் பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை (வேதா நிலையம்) நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. தொடர்ந்து அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படுவதாக கடந்த அதிமுக அரசு சட்டம் இயற்றியது. 

இதையடுத்து, வேதா இல்லம் நினைவிடமாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வேதா இல்லம் நினைவிடமாக திறக்கப்பட்டது.

ஆனால் அதிமுக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்ட ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் இருவரும் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை. எனவே வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இந்த வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லாமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஜெயலலிதாவின் வாரிசுகளான எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல், நிலம் கையகப்படுத்தப்பட்டதையும், வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதும் தவறு என்று தீபா மற்றும் தீபக் இருவரும் வாதிட்டனர்.

அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 95 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதி சேஷசாயி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வேதா நிலையம் தொடர்பான வழக்குகளில் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. 


அப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கிய சட்டம் செல்லாது என்றும் ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், வேதா நிலையத்தின் சாவியை 3 வாரத்தில்  ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக் இருவரிடமும்  ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

வேதா நிலையத்துக்கு இழப்பீடாக செலுத்தப்பட்ட 67 கோடியே 95 லட்சம் ரூபாயை அரசிடம் திருப்பி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

மேலும் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது,  2-வது நினைவிடம் எதற்கு? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஜெ. தீபா

இது தொடர்பாக  ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியதாவது, இது ஆரம்பகட்டம் தான் என்றும், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம் என்றும் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார்

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்களின் விருப்பப்படியே வேதா நிலையம் அரசுடமையாக்கப்பட்டது என்று கூறினார். மேலும், கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 

No comments

Thank you for your comments