முதல்வரின் முகவரி புதிய ஒருங்கிணைந்த துறை உதயம் - அரசாணை வெளியீடு
சென்னை, நவ.14-
தமிழ்நாடு முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணை விபரம்:
“முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.
முதல்- அமைச்சர் தனிப்பிரிவின் மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள சிறப்பு அலுவலர் மற்றும் தனிப்பிரிவின் கீழ் தற்போதுள்ள பல்வேறு அலுவலக பிரிவு அலுவலர்கள், முதல்வரின் முகவரி துறையின் கீழ் செயல்படுவார்கள்.
6 பொது குறை தீர்வு மேற்பார்வை அதிகாரிகள் இனிமேல் முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரியின் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.
முதலமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீர்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்”, துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
No comments
Thank you for your comments