Breaking News

மத்திய அரசின் அதிகார சக்தி தோற்கடிப்பு - சிவசேனா

மும்பை:

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்தது, ஆணவத்தின் சக்தி தோற்கடிக்கப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுதல் அறிவிப்பு சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து நடந்த கண்துடைப்புதான் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.



மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக  நவ.19ம் தேதி அன்று பிரதமர் மோடி   அறிவித்தார்.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில், பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல் குறித்த அறிவிப்பைச் சுட்டிக்காட்டி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

 அதில் கூறி இருப்பதாவது:-

''மத்திய அரசு இந்த 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கித்தான் நிறைவேற்றியது. அதன்பின் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை முற்றிலும் நிராகரித்தது.

விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தில் அவர்களுக்குக் குடிக்க நீர் கிடைக்கவிடாமல், மின்சாரம் கிடைக்கவிடாமல் மத்திய அரசு இடையூறு செய்தது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான்கள், பாகிஸ்தானியர்கள், தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியது மத்திய அரசு.

ஆனால், இவ்வளவும் நடந்தபோதிலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கையான வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்தச் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும் ஆதரவான சட்டம். இந்தப் போராட்டத்தில் 550 விவசாயிகள் உயிரிழந்தனர். லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் ஒருவர் காரை ஏற்றினார். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகள் உயிரிழப்புக்கு ஒரு வார்த்தை கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

13 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பா. ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் ஞானம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை அறிந்தும் விரைவில் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட உள்ளதை உணர்ந்தும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு தேர்தலை முன்வைத்து எடுக்கப்பட்ட, கண்துடைப்பு நடவடிக்கை. ஆனால், இந்த வெற்றி விவசாயிகளின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி.

மகாபாரதமும், ராமாயணமும் அகந்தை முழுமையாக நசுக்கப்படும் என்று போதிக்கின்றன. ஆனால் அதனை போலி இந்துத்துவா வாதிகள் மறந்து விட்டு ராவணனைப்போல் உண்மை மற்றும் நீதி மீது தாக்குதல் தொடுத்தனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் அறிவிப்பு அதிகார அகந்தையின் வீழ்ச்சி ஆகும். 

இனிமேலாவது இதுபோன்ற சட்டங்களை கொண்டு வரும் முன்பு மத்திய அரசு தனது அகந்தையை கைவிட்டு நாட்டு நலன் கருதி எதிர்க்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அநீதி, சர்வாதிகாரத்துக்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments

Thank you for your comments