Breaking News

ஆவடி, வில்லிவாக்கம், பூவிருந்தவல்லி பகுதிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை

திருவள்ளூர் மாவட்டம்  - ஆவடி, வில்லிவாக்கம், பூவிருந்தவல்லி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்

வடகிழக்குப் பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் மிக அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.11.2021)  நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றிடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்கள். 

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, பத்மாவதி நகரில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

திருவேற்காடு நகராட்சி, வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி நிவாரண முகாமினை பார்வையிட்டு, அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். மேலும், வேலப்பன்சாவடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

பூவிருந்தவல்லி நகராட்சி, அம்மன் கோவில் தெரு, காவலர் குடியிருப்பில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் வழங்கினார்.

ஆவடி மாநகராட்சி, ஸ்ரீராம் நகர் மற்றும் திருமுல்லைவாயல், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளம் தேங்கியுள்ள மழைநீரை இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.

முதலமைச்சர் அவர்கள் இன்று பார்வையிட்ட 4 இடங்களிலும் சாலை மற்றும் தெருக்களில் பெருந்திரளாக நின்றிருந்த பொதுமக்களிடம், மழைக்காலங்களில் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும், கொரோனா காலத்தில் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பரிவுடன் எடுத்துரைத்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடச் செல்லும் வழியில், ஆவடி மாநகராட்சி, மூர்த்தி நகர், பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரக் கடையில் தேநீர் அருந்தி, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கினார்.

வில்லிவாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு அருகில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை பார்வையிட்டு, மருத்துவ அலுவலர்களிடம், “இன்று எவ்வளவு நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள்?” எனக் கேட்டறிந்து, முகாமிற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் மாலை வரை இருந்து தடுப்பூசி செலுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கே. ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஆ. கிருஷ்ணசாமி, பெருநகர சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாவட்ட நிவாரணப் பணிகள் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் இரா. ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



No comments

Thank you for your comments