கடைக்கோடி கிராமத்தில் தடுப்பூசி வினியோகித்த ‘டிரோன்’
பெங்களூரு, நவ.14-
டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பூசி சென்றடைந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மாவட்டத்தில் கடைக்கோடியில் உள்ள ஹரக்காட்டே என்ற கிராமத்துக்கு சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து 50 கொரோனா தடுப்பூசி குப்பிகளை சிரிஞ்சுகளுடன் தி ஆக்டாகாப்டர் என்ற டிரோன் (ஆளில்லா சிறிய ரக விமானம்) எடுத்துச் சென்று நேற்று காலை 9.53 மணிக்கு ஒப்படைத்தது. அதன்பின்னர் அந்த டிரோன், சந்தப்புரா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரும்பியது.சாலை வழியாக சென்றால் 40 நிமிடத்தில் சென்று அடையக்கூடிய தொலைவை இந்த டிரோன் 10 நிமிடத்தில் சென்று அடைந்துள்ளது.
டிரோன் வந்து கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்ததைக் கண்டு ஆரம்ப சுகாதாரத்தில் பணியில் இருந்த டாக்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி டாக்டர் மணிஷா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த டிரோன் சேவையை தொலை தூரத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் தேசிய விண்வெளி ஆய்வகத்தின் வாகன பிரிவு தலைவர் சத்யநாராயண மூர்த்தி கூறும்போது, தொலை தூர பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்க ஆக்டாகாப்டர் டிரோனின் சேவை தேவை என்றும், இந்த டிரோனை இயக்குவது எளிது என்றும் கூறினார்.
இந்த வினியோகத்தை செய்துள்ள டிரோன், இதற்காகவே வடிவமைக்கப்பட்டு தேசிய விண்வெளி ஆய்வுக்கூடத்தால் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments