Breaking News

சதுப்பேரி உபரி நீரை திருப்பி விட விவசாயிகள் கோரிக்கை

வேலூர், நவ.8-

சதுப்பேரி உபரி நீரை திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியில் தற்போது கனமழை பெய்து வருவதால் நீர் நிறைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக இதில் இருந்து உபரிநீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது .இந்த தண்ணீரை விவசாயிகள் பாசனத்திற்காக அருகிலுள்ள ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

ஆனால் மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை, நீர்ப்பாசனத்துறை போன்ற அரசு எந்திரங்கள் அலட்சியம் காட்டி வருகின்றன. உபயோகமாக வீணாகும் நீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் காட்டுக் கூச்சலாக வலியுறுத்தியும் அரசு அதிகாரிகள் அதை அலட்சியப்படுத்தி வருகின்றனரே தவிர அதை சேமிக்க வழிவகை செய்ய வில்லை என்பதே விவசாயிகளின் ஆதங்கமாக உள்ளது. 

தற்போது சதுப்பேரியில் இருந்து வெளியாகும் உபரி நீர் ஊருக்குள் புகுந்து தெருக்களில் பாய்ந்து தாழ்வான வீடுகளுக்குள்ளும் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளது. இதனால் பல ஏழை, எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதை வாய் வழியே கேட்பதை விட நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டால் உண்மை நிலை என்னவென்று அரசு அதிகாரிகளுக்கு புரியும்.

ஆனால், அதை விடுத்து விட்டு இருக்கும் இடத்தில் அமர்ந்துகொண்டு மழை தான் பெய்கிறது தண்ணீர் செல்கிறது என்று பெயரளவில் சொல்லிக் கொண்டிருப்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. அப்பாவி பொதுமக்கள் மழைநீரால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டுள்ளது நின்றுவிடப் போவதில்லை. அவதிப்படுபவர்களுக்கு தான் ஆதங்கம் தெரியும். தற்போது இடைவிடாது மழை பெய்து வருவதால் குறிப்பாக கனமழை பெய்வதால் சதுப்பு ஏரியிலிருந்து மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து வீதிகளில் வரைமுறையின்றி பாய்ந்து ஓடுகிறது. இப்படி மழை காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதுவும் மேற்கொள்ளாமல் மழை வந்த பிறகு பொதுமக்கள் பாதிப்புக்குள்ளான பிறகும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் பொது மக்கள் படும் அவதியை கைகட்டி வேடிக்கை பார்ப்பது மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. வரும் முன் காப்போம் என்று சொல்வார்கள். ஆனால் வந்தபின்னும் காக்காமல் இருப்பது இங்கு தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

அரசு என்னதான் திட்டம் போட்டாலும் அதை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் அலட்சியப் போக்கில் தொடர்ந்து இருப்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். 

வேலூர் மாவட்டம் என்றாலே இங்கு பணியாற்றும் அதிகாரிகள் பொது மக்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. குறிப்பாக மனிதர்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை என்று சொல்லலாம். ஆடு, மாடுகளை விட கேவலமாக மதித்து நடப்பதுதான் இவர்களது தலையாய கடமையாக உள்ளது. ஏழைகள் படும் பாட்டை அவர்கள் அனுபவிப்பதை வார்த்தைகளால் சொல்வதால் எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை. 

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எருது நோய் காக்கைக்கு தெரியுமா என்று சொல்வார்கள். அது போன்று இதுவும் என்று சொல்லலாம். 

வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டதால் பல ஏழை எளியவர்கள் தங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு பகல், இரவு என காவல் காத்து வருவது கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு தீர்வு காணவேண்டிய மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைந்து பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்கில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. மண் கொட்டி தண்ணீர் செல்லும் பாதைகளை அடைத்துள்ளனர் சமூகவிரோதிகள் சிலர். 

அந்த மண் கொட்டி அடைக்கப்பட்ட பாதையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து உபரிநீர் முறைப்படி சென்று கால்வாய்கள் உதவியுடன் அருகிலுள்ள ஏரிகளில் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்குப் பிறகும் மாவட்ட நிர்வாகம் அமைதியாக இருக்குமா?அல்லது அதிரடி நடவடிக்கையை தொடங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments