அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி .. இபிஎஸ்ஸின் தனி உதவியாளர் மணி கைது
சென்னை, நவ.28-
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.37 கோடி ரூபாய் மோசடி செய்த எடப்பாடி கே. பழனிசாமியின் தனி உதவியாளர் மணியை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி பல்வேறு தரப்பினரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நெய்வேலி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மணி மீது மோசடி புகார்கள் தொடர்ச்சியாக குவியத் தொடங்கியதை அடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மணி உட்பட இருவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மணி உட்பட இருவரும் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தனர். அவரைப்பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், மணி முன் ஜாமின் கேட்டு கடந்த 1ம் தேதி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு மணியின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தலைமறைவாக இருந்த மணியை இன்று அவரது வீட்டில் சேலம் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments