Breaking News

நெல்பயிரில் புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

பரமத்தி, நவ.19.

வேளாண் பயிர்களில் குறிப்பாக நெற்பயிர்களில் புகையான் மற்றும் கரையான் தாக்குதலை   கட்டுப்படுத்தும்  வழிமுறைகள் குறித்து பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தெரிவித்துள்ளார். 

விவசாயிகளுக்கு வழங்கியுள்ள அச்செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது... 

தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்பயிர்களை புகையான் தாக்கும் அபாயம் உள்ளது. கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கடைபிடித்து புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

பொருளாதார சேத நிலை:-               

 தூருக்கு 1 பூச்சி இருத்தல்(இரை விழுங்கி சிலந்தி இல்லாத நிலையில்), தூருக்கு 2 பூச்சி இருத்தல்(இரை விழுங்கி சிலந்தி தூருக்கு 1 இருக்கும் நிலையில்)

புகையான்  தாக்குதல் அறிகுறிகள் ;- 

புகையான் பூச்சி நெற்பயிரின் தூர்களின் அடிபாகத்தில் இருந்து கொண்டு பயிரின் சாறை உறிஞ்சுகிறது. இதனால் பயிர் திட்டு திட்டாக வட்ட வடிவில் காயத்தொடங்கி நெற்பயிர் எரிந்து புகைந்து விட்டதை போல் காணப்படுவதால் இப்பூச்சிக்கு புகையான் என்று பெயர். வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் தாக்குதல் அதிகமிருக்கும், இப்பூச்சியின் தாக்குதல் பயிர் நன்கு தூர்கட்டும் நிலையிலிருந்து மணிபிடித்து முற்றும் வரையில் அதிகம் இருக்கும்.

புகையான் மேலாண்மை முறைகள் :-

வயலில் ஒரு அங்குல உயரத்திற்கு மேல் நீர் தவிர்த்தல், தழைச்சத்தினை அதிகமாக இடுவதை தவிர்த்து 3 முதல் 4 முறை பிரித்து இடவும், நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி பட்டம் விட்டு நடவு செய்தல், நெருக்கமாக நடாமல் சரியான இடைவெளியில் நடவு செய்தல், விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழித்தல், பொருளாதார சேத நிலையை தாண்டும் போது மட்டும் ஏக்கருக்கு புப்ரோபெசின் 25% எஸ்சி-300 மிலி, பிப்ரோனில் 5% எஸ்சி – 500 மிலி, அசிபேட் 75% எஸ்பி 400 கிராம், அசிபேட் 95% எஸ்ஜி 235 கிராம், அசிட்டாமிபிரிட் 20% எஸ்பி 40 கிராம், அசாடிராக்டின் 0.3% 400 மிலி, கார்போசல்பான் 25% ஈசி  400மிலி, குளோரன்டிரினிபுரோல் 18.5% எஸ்சி  60 கிராம், இமிடா குளோப்பிரிட் 17.8% எஸ்சி  50 கிராம். ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியினை தெளித்து பயன்பெறலாம் என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தனது  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments