Breaking News

தொடர் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.... கலக்கத்தில் பறிதவிப்பு!

சென்னை:

மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னைச் சுற்ற்றியுள்ளவர்களின் தடாலடிகளால் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.   ஜெகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுமே பிற்பகல் விமானத்தைப் பிடித்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அவசரமாக சென்றார் அமைச்சர் அனிதா. அங்கே முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நண்பரை சந்தித்து, இந்த விவகாரத்தில் தனக்கு பாதிப்பு ஏதும் வராத மாதிரி பார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.  

சில வாரங்களுக்கு முன் தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபா, அமைச்சருடன் வந்த வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறிய தலைமைக் காவலர் முத்துக்குமாரை கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் கிருபா மீது புகார் கொடுத்தார் தலைமைக் காவலர். இந்தப் புகாரை தனது அமைச்சர் செல்வாக்கு மூலம் திரும்பப் பெற வைத்துவிட்டார் அனிதா. இந்தப் பிரச்சினையை அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியே குறிப்பிட்டு சட்டம் ஒழுங்கு இவ்வளவுதானா என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் இரண்டே வாரத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வலதுகரமாக கருதப்படும் இன்னொருவர் மூலம் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பிஏவும், வலது கரமாக இருப்பவருமான ஜெகன் எனப்படும் பில்லா ஜெகன் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுலா மாளிகை ஊழியர் சதாம் சேட் என்பவர் தீபாவளி அன்று புகார் கொடுத்தார். அதில், “நவம்பர் 4ம் தேதி மாலை 6 மணியளவில் தூத்துக்குடி தெற்குக் கடற்கரை சாலையில் இருக்கும் தமிழ்நாடு சுற்றுலா மாளிகை வளாகத்தில் உள்ள லைட்டுகளை போட நான் சென்றேன். அப்போது வளாகத்துக்குள் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்கும் தனி நீதிபதி ஆணையம் முன்பாக டி என் 69 பி எம் 7 என்ற எண் கொண்ட டயோட்டா ஃபார்ச்சூன் கார் நின்றிருந்தது. அந்த காரின் முன்பாக ஜெகன் என்கிற பில்லா ஜெகன் மற்றும் பார்த்தால் அடையாளம் தெரியும் 5 பேர் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புக்கு நின்றிருந்தார்.


இதைப் பார்த்து நான், ‘இங்கே மது அருந்தக்கூடாது. வளாகத்தை விட்டு வெளியே போங்க’ என்று கூறினேன். 


அதுக்கு ஜெகன், ‘இந்த ஆபீசை (ஸ்டெர்லைட் தனி நபர் ஆணையம்) அதுக்குள்ள உக்காந்து நாங்க சாப்பிட்டுக்குறோம்’ என்று கூறினார்.ஆனால் நான், ‘அது நீதிபதிக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம். அங்கே போகக் கூடாது’ என்று கூறினேன். அதற்கு ஜெகன், ‘நான் தான் நீதிபதி, உன்னால் திறக்க முடியுமா முடியாதா?’ என்று கேட்டார். நானோ முடியாது என்றேன். அதற்கு ஜெகன் என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே தாக்கினார். ஜெகனோடு வந்தவர்களும் என்னைத் தாக்கினார்கள். பாதுகாப்புக்கு நின்ற போலீஸ்காரர்தான் அவர்களைத் தடுத்து என்னைக் காப்பாற்றினார்.

அரசு அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மது அருந்துவதற்காக திறக்கச் சொல்லி என்னைத் தாக்கிய ஜெகன் மற்றும் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகாரில் கூறியிருக்கிறார் சதாம் சேட். இந்தப் புகாரின் பேரில் ஜெகன் என்கிற பில்லா ஜெகன் மீது தென் பாகம் போலீஸ் நிலையத்தில் அரசு அலுவலகத்தில் புகுந்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

சம்பவத்தைப் பற்றி கேட்டறிந்தது திமுக தலைமை. ஏற்கனவே அனிதாவைச் சுற்றியுள்ளவர்களின் அதிரடிச் செயல்பாடுகளால் கோபம் அடைந்த நிலையில் தற்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெகனின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி அடைந்து, அவரை உடனடியாக கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

முரசொலியில், ‘தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே. ஜெகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் அவப்பெயர் விளைவிக்கும்படி செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அத்தனைப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்’என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெகன் நவம்பர் 6ம் தேதி மாலை கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு பரபரப்பாகியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் கூறுகையில், “அரசின் ஒவ்வொரு செயல்பாடும் மக்களை நோக்கி இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செயல்படுகிறார். ஆனால் இங்கே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சுற்றியிருப்பவர்கள் தாங்கள் வைத்துதான் சட்டம் என்று சட்டம் ஒழுங்குக்கே சவால் விடும் வகையில் செயல்படுகின்றனர். அனிதா ராதாகிருஷ்ணன் எப்படியும் தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பிதான் இவ்வாறு அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இவர்கள் மீது மட்டுமல்ல அமைச்சர் அனிதாவையும் அழைத்து தலைமை எச்சரிக்க வேண்டும் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுமே பிற்பகல் விமானத்தைப் பிடித்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு அவசரமாக சென்றார் அமைச்சர் அனிதா. அங்கே முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நண்பரை சந்தித்து, இந்த விவகாரத்தில் தனக்கு பாதிப்பு ஏதும் வராத மாதிரி பார்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அனிதாவின் ஒவ்வொரு சறுக்கலில் இருந்தும் அவரை காப்பாற்றுவது முதல்வருக்கு நெருக்கமான அந்த 'ராஜ' நண்பர்தான் காப்பாற்றி வருகிறார். இம்முறையும் காப்பாற்றுவாரா? திமுக தலைமை என்ன நடவடிக்கை மேற்கொள்ள போகின்றது என்று ரத்தத்தின் ரத்தங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்...

No comments

Thank you for your comments