Breaking News

பசுமை நாமக்கல் திட்டம் துவக்கம்!

நாமக்கல், நவ.19-

பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயாசிங்  தொடங்கிவைத்தாா்.

நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலை  மேம்படுத்தி பசுமைப் பரப்பை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆறு  அமைந்திருந்தாலும், பல பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் பல சூழல் காரணிகளால் குறைவாகவே உள்ளது.




இதனால் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து ஏற்படுத்தப்பட்ட ‘நம்ம நாமக்கல் பசுமை நாமக்கல்’ திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. கடந்த செப். 24-ஆம் தேதி சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள், கோயில்கள், நெடுஞ்சாலைகள், மலைப் பகுதிகள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.


அதன் தொடா்ச்சியாக, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், பெரியப்பட்டி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 16.5 ஏக்கா் நிலப்பரப்பில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பூவரசன், வேம்பு, புங்கன், புளி, அரசன், வாகை உள்ளிட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் ஸ்ரேயா சிங் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழரசு, நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் உதவி ஆணையா் ரமேஷ், நாமக்கல் வட்டாட்சியா் திருமுருகன், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

No comments

Thank you for your comments