Breaking News

கன மழையின்போது தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

சென்னை

வடகிழக்கு பருவ மழையின்போது சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்துப் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது.

சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அரசு ஊழியர்கள் மின்மோட்டர்களை கொண்டு அகற்றி வருகிறார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண உதவிகளை நேரடியாக வழங்கி வருகின்றனர்.

தொடர் கன மழைக் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் விரைந்து சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

சென்னையின் அனைத்து மின்பகிர்மான வட்டத்துக்குள் மொத்தமாக 223 துணைமின் நிலையங்கள் உள்ளன. அதில் ஒன்று மட்டுமே மழை வெள்ளம் காரணமாய் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை குறைவது வெள்ள நீர் வடிவதற்கேற்ப விரைந்து செயல்பாட்டுக்கு வரும்.

சென்னை மின் பகிர்மான வட்டத்துக்குள் கிட்டத்தட்ட 44,50,000 மின் இணைப்புகள் உள்ளன, அதில் 12,297 மட்டும் பாதுகாப்பு காரணமாய் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மழை காரணமாகச் சேதமடையும் மின் கம்பங்களை உடனே மாற்றுவதற்காக ஒரு லட்சம் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன.  சென்னையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில், மழைநீர் அகற்றப்பட்டு விரைந்து மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடங்களில் சீர் செய்யும் பணியில் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு வருகிறனர்.   வேறு எந்த உதவி வேண்டும் என்றாலும் அரசால் அறிவிக்கப்பட்ட இலவச உதவி எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மழையால் ஏற்படும் மின்பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் மின்னகத்துக்கு புகார்களை தெரிவிக்க வேண்டும்  என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments