Breaking News

உயர்மட்ட பாலத்தின் வழியாக புதிய மின்தட பாதை அமைத்து மின் விநியோகம்...!

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம்  பாலாற்றில் ஏற்பட்ட, காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மின்தட கம்பிகள் மற்றும் மின்கம்பங்களுக்கு மாற்றாக, உயர்மட்ட பாலத்தின் வழியாக புதிய மின்தட பாதை அமைத்து, மின் வாரியத்தினர் மின்சாரம் வினியோகித்தனர்.

காஞ்சிபுரம் பாலாற்றில்  கடந்த 10 நாட்களுக்கு  மேலாக ஓடிய காட்டாற்று வெள்ளத்தால், வெள்ளாகுளம்  துணை மின் நிலையத்தில் இருந்து, பாலாற்றின் வழியாக குருவிமலை, களக்காட்டூர், அதைச்சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும், 11 கே.வி. மின்வழித்தட கம்பிகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட கம்பங்கள், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன.இதனால், களக்காட்டூர், குருவிமலை, வேடல்  மற்றும் அதை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தற்காலிகமாக மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது.

அங்கு ஏற்பட்ட மின்தடையை சீரமைக்க, காஞ்சிபுரம் மின் வாரிய தெற்கு கோட்டம் மேற்பார்வை பொறியாளர் ஆர்.ஜி.பிரசாத், செயற்பொறியாளர்  சரவணதங்கம், உதவி செயற்பொறியாளர்கள், லெ.சாகுல் அமீது, ஆர்.இளையராஜான், உதவி பொறியாளர்கள் ஜெ.செந்தில்குமார், கே.மனோகரன் திருமுக்கூடல் உதவி பொறியாளர் வெங்கடேசன், ஒரிக்கை உதவி பொறியாளர் சிவானந்தம், உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.ஆற்றில் வெள்ளம் குறைந்து, மின்கம்பம் நடவு செய்து, கிராமங்களுக்கு மீண்டும் மின் வினியோகம் வழங்குவதற்கு, காலதாமதம் ஆகும் என்பதால், பாலாற்றின் மேம்பாலத்தின் வழியாக மின்தட பாதை அமைக்க முடிவு செய்தனர்.



அதன்படி, சென்னையில் இருந்து பிரத்யேகமாக புதைவட மின் கம்பி வரவழைக்கப்பட்டது.

தொடர்ந்து மாகரல், இளையனார் வேலூர், பிரிவு உதவி பொறியாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள், இரவு - பகலாக சுழற்சி முறையில், இடைவெளி இல்லாமல் பணிபுரிந்தனர்.

சீரான மின்சாரம்பாலாற்று வழியாக சென்ற மின்தட பாதைக்கு பதிலாக, பாலாறு  உயர்மட்ட பாலத்தின் வழியாக, கேபிள் அமைக்கும் பணியை துவக்கினர். இரு நாட்களில் பணியை முடித்து, ஒரிக்கை துணை மின் நிலையத்திலிருந்து மாகரல் பிரிவிற்கு புதிய மின்தட பாதை அமைத்து மின்சாரம் வழங்கினர். 

10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு, சீரான மின்சாரம் வழங்கினர்.ஆற்றில் வெள்ளம் வடிவது எப்போது, நமக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பது எப்போது என, ஆதங்கப்பட்ட கிராமவாசிகளுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாற்றி யோசித்த மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments