சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் எம்.என். பண்டாரி
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி (எம்.என். பண்டாரி) இன்று (22-11-2021) ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுகொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி எம். துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் உத்தரவு பிறப்பித்தார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்பு
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.
எம்.என். பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் வாழ்த்து
ஆளுநர் மாளிகையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) எம். துரைசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, சபாநாயகர் அப்பாவு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ktamilnews
No comments
Thank you for your comments