அதிமுக ஆட்சியில் ஊழல்... சொல்வது கூட்டணி கட்சி
ஸ்ரீரங்கம்:
100 நாள் வேலை திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இரு தேர்தல்களிலும் அக்கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போதும் இந்த கூட்டணி பலத்த அடி வாங்கியது. இதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் இக்கூட்டணியில் இடம்பெற்ற பாமக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் கண்டது குறிப்பிடத்தக்கது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என அக்கட்சியின் தமிழக முக்கிய புள்ளிகள் கருதுகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக அண்ணாமலையின் பேட்டி அமைந்துள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அக்கட்சியை பலமாக விமர்சித்துள்ளது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“தமிழ்நாட்டில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.246 கோடி ஊழல் நடந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே இந்த ஊழல் நடந்துள்ளதாக அக்டோபர் மாதம் நடந்த கணக்கு தணிக்கையில் தெரிய வந்துள்ளது. ஊழல் செய்யப்பட்டதில் ரூ.ஒரு கோடியே 85 லட்சம் மட்டுமே தமிழ்நாடு அரசால் மீட்கப்பட்டுள்ளது. விரைவாக அனைத்து பணத்தையும் மீட்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை. உடனடியாக குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறானது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments