Breaking News

6 ஆண்டுகளாக மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது?- உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை:   

2015ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்று  நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான பகுதிகளில் மக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளநீரை வேகமாக வெளியேற்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சாலை அகலப்படுத்துவது தொடர்பாக பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சாலை அகலப்படுத்துவதில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட முறையான வசதிகளை  ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, இரண்டு நாட்களாக பெய்த கனமழையில் சென்னை மீண்டும் தத்தளிப்பது ஏன் என்று தலைமை நீதிபதி சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், 2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தை பாடமாகக் கொண்டு வரும் எதிர்கால பருவமழையை சமாளிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால்,  சென்னையில் மீண்டும் மழைநீர் தேங்கியது ஏன்? 

2015ம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?  

பெருவெள்ளத்திற்கு பிறகு 5 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருந்தது? என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடரப்படும் என்றும்  வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்த நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments