Breaking News

உட்கட்டமைப்புகளை சீரமைக்க ரூபாய் 300 கோடி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை

வடகிழக்குப் பருவமழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூபாய் 300 கோடியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16-11-2021) அறிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிகளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன.  

முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளில் சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளை சந்தித்து, அவர்களது கருத்துக்களை கேட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க  கூட்டுறவுத் துறை அமைச்சர்  இ. பெரியசாமி அவர்கள் தலைமையில் ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழுவினை அமைத்து  தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 11-11-2021 அன்று ஆணையிட்டிருந்தார்கள். இதன்படி, இக்குழு, உடனடியாக 12-11-2021 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு நீரில் மூழ்கிய பயிர்களைப் பார்வையிட்டு, பயிர் பாதிப்பு நிலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

மேலும்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 13-11-2021 அன்று டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

நேற்று (15-11-2021), கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்கள்.

இந்நிலையில், இன்று (16-11-2021), பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை  அமைச்சர் பெருமக்கள்  முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தனர். இக்குழுவின் அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விரிவான ஆலோசனைக்குப் பின்னர்,  முதலமைச்சர் அவர்கள் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை-கார்-சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்றும்,

நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருள்கள் பின்வருமாறு வழங்க  முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூபாய் 300 கோடி வழங்கவும்  முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இந்தக் கூட்டத்தில், குழுவின் தலைவர்  கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, குழுவின் உறுப்பினர்கள்  தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்,  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  அர.சக்கரபாணி,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments