Breaking News

நாளை 2வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி தொடக்கம்

ஈரோடு, நவ.9-

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்வது நாளை (10.11.2021) தொடக்கம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடைகளை கோமாரி நோய்தாக்கத்தில் இருந்து தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசியகால் நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. கால்நடை வளர்ப்பில் கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக கலப்பின மாடுகளை கால் மற்றும் வாய்நோய் அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். 

இந்நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினைபிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ஆறுமாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100  சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


அதன்படி நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 10.11.2021 முதல் தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்கள் குக்கிராமங்கள், பேரூராட்சிகள்,  நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் தேசியகால் நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் (NADCP) இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளது.  

இதற்காக ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின்  மண்டல இணை இயக்குநர் அலுவலகத்துக்கு 2.80 இலட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு   மருந்துகள் ஈரோடு கால்நடை நோய் புலனாய்வு பிரிவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் (Walk in cool Room) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு கோமாரி நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments