பாசன வசதிக்காக ஈச்சம்பாடி அணையிலிருந்து நீர் திறப்பு
தருமபுரி, அக்.25-
தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது புற வாய்க்கால்களில் பாசன வசதிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி 24.10.2021 அன்று தண்ணீர் திறந்து வைத்தார்.
இதனால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் ஈச்சம்பாடி, அக்ரஹாரம், கெட்டுப்பட்டி, எலவடை, பாளையம், சாமாண்டஅள்ளி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட 32 கிராமங்கள் பயன்பெறும். மேலும், நெல், கரும்பு, ராகி, சோளம், நிலக்கடலை, தென்னை ஆகிய வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்து பயன்பெற உள்ளனர். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வேளாண் பெருமக்கள் அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி தங்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று அதிக மகசூல் பெறவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பி.சுப்பிரமணி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் திரு.எஸ்.குமார், உதவி பொறியாளர் திரு.பிரபு, காரிமங்கலம் வட்டாட்சியர் திரு.சின்னா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.சுமதி செங்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.தனபால், ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.சாந்தி, விவசாய பெருமக்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments