கோடநாடு வழக்கில் திடீர் திருப்பம்! கனகராஜை கொலை செய்ய சொன்னது யார்?
சென்னை :
கோடநாடு வழக்கில் முக்கியமான திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் மரணம் தொடர்பாக மற்றொரு குற்றவாளியான சந்தோஷ் சாமி என்ற நபர் கேரளாவில் அதிர்ச்சி பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் இங்கு நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்த வழக்கில் கனகராஜ் மரணம், சயான் குடும்பத்தினர் மரணம், கோடநாடு எஸ்டேட் எஞ்சினியர் தற்கொலை உள்ளிட்ட பல மர்ம மரணங்கள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து செல்கிறது. 5 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜை கொலை செய்ய சொன்னது யார் என்பது மர்மமாக உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான திபு தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்த வழக்கு தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், கனகராஜ் அழைத்துதான் நாங்கள் அங்கே சென்றோம். எங்களுக்கு அங்கே செல்லும் போது அது கோடநாடு எஸ்டேட் என்று தெரியாது. எம்எல்ஏ குடோன் ஒன்று இருக்கிறது. அங்கு பணம் இருக்கிறது. கொள்ளையடிக்கலாம் என்று கூறி அழைத்து சென்றனர்.
அந்த இடத்தை பார்த்ததும் எங்களுக்கு பயமாக இருந்தது. இது பெரிய இடம். பிரச்சனை உள்ள இடம் என்று கூறினோம். ஆனால் கனகராஜ், நீங்கள் எல்லாம் கேரளா ஆட்கள். பயப்பட வேண்டாம். பிரச்சனை இருக்காது. நான் முன்னாடி செல்கிறேன். நீங்கள் பின்னாடி வாருங்கள் என்று கூறி அழைத்து சென்றார். அவர் மட்டும் மாஸ்க் போடவில்லை. நாங்கள் எல்லாம் மாஸ்க், கிளவுஸ் போட்டோம்.
கனகராஜ் எதுவும் போடாமல் ஃபிரியாக சென்றார். அவர் எதுவும் பிரச்சனை இல்லாத நபர் போல உள்ளே சென்றார். உள்ளே சென்றவர் இரண்டு பைகளோடு வந்தார். அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. பேப்பர்ஸ் இருந்தது என்று மட்டும் தெரியும், என்று திபு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏ8 ஆக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் சந்தோஷ் சாமி திடுக்கிடும் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் சந்தோஷ் சாமி அளித்த பேட்டியில், எங்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற போது ஜீப்பில் செபி என்ற நபர் இருந்தார். இன்னும் சில நபர்களும் இருந்தனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. காரில் இருந்த செபி அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர். இவர்தான் கனகராஜை கொலை செய்யும்படி ஒருவரிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு அருகில் இருந்து போனில் பேசிய செபி, கனகராஜை தீர்த்துவிடு.. இன்றே சேலத்திற்கு செல்லுங்கள். அங்கே ஒரு பங்க்சன் நடக்கிறது. அங்கே சென்று கனகராஜை கொன்று விடுங்கள் என்று செபி போனில் கூறினார். செபி தமிழில் பேசினார். ஆனால் அவர் யாரிடம் போனில் பேசினார் என்று தெரியவில்லை, ஆனால் மறுநாளே கனகராஜன் இறந்துவிட்டார் என்று, சந்தோஷ் சாமி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். கனகராஜன் மரணம் தொடர்பாக சந்தோஷ் சாமி அளித்து இருக்கும் இந்த பேட்டி வழக்கில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
போலீசார் தங்களை அழைத்து செல்லும் போது போலீஸ் ஜீப்பில் நீலகிரி அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் செபி இருந்ததாகவும், செபி என்ற அந்த நபர்தான் சிலருக்கு போன் செய்து கனகராஜை கொல்லும்படி கூறியதாக சந்தோஷ் சாமி தெரிவித்துள்ளார். போலீஸ் வாகனத்தில் பல குண்டர்கள் இருந்ததாக சந்தோஷ் சாமி கூறியுள்ளார். செபி சொல்லித்தான் கனகராஜ் கொல்லப்பட்டதாக சந்தோஷ் சாமி கூறியுள்ளது. செபி யாருக்கு போன் செய்தார், யாரிடம் கனகராஜை கொல்லும்படி கூறினார் என்பது மர்மமாக உள்ளது. கோடநாடு வழக்கில் இது மிகப்பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.
No comments
Thank you for your comments