Breaking News

விஜயதசமிக்கு கோவில்கள் திறக்கப்படுமா? அரசுக்கு அதிகாரம் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிக்க வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன்  நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.  

விஜயதசமி அன்று கோவில்களை திறக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தது.



கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தின்ம் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோவிலை திறக்காமல் பிடிவாதமாக இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று பட்டியலில் வராததால் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நிலையான வழிகாட்டு நெறிகளை பின்பற்றி விஜயதசமியன்று மட்டும் கோயிலைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் முறையிட்டார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் கோவிலில் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இதுகுறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை  பிற்பகல்  தள்ளி வைத்தனர்.

அப்போது, அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது என்றும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் மற்றும் அறிவிக்க வேண்டிய தளர்வுகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்களுடன்  நாளை ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

இதனை ஏற்றுகொண்ட நீதிமன்றம், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கட்டும் என்று கூறி, வழக்கை தள்ளி வைத்தது.

No comments

Thank you for your comments