இருசக்கர வாகனம் மீது கனரக லாரி மோதி விவசாயி உயிரிழப்பு... உறவினர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம்:
கனரக லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (52). இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மூன்று மகள்களுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் காஞ்சிபுரத்துக்கு மளிகை பொருட்கள் வாங்க தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஓரிக்கை பகுதியில் வந்து கொண்டிருந்தபது உத்திரமேரூர் சாலையில் இறங்க முயன்ற கனரக லாரி கட்டுப்பாட்டை இழந்து தனசேகர் மீது மோதியது.
இதில் தனசேகரன் நிலை தடுமாறி கீழே விழுந்து லாரியில் சிக்கி சுமார் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனசேகரன் பலியானார்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உத்திரமேரூர் காஞ்சிபுரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அங்கு வந்த காஞ்சிபுரம் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, லாரி மீது முறையாக வழக்கு பதியப்படும் என தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
லாரி விபத்தில் விவசாயி சிக்கி பலியானது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.



No comments
Thank you for your comments