Breaking News

வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடக்கம்

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி இன்று தொடங்கி வைத்தார்.


தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தொடக்க விழா இன்று (12.10.2021) நடைபெற்றது. 

இம்முகாமிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். 

இம்முகாமிற்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி அவர்கள்  தலைமையேற்று மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பேசும் போது தெரிவித்ததாவது:

மாண்மிபுமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இதன் தொடர்ச்சியாக "கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்" தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டாரம், கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் வசிக்கும் இடத்திலேயே சிறப்பு மருத்துவ சேவை அளிக்கும் வகையில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை மருத்துவ பரிசோதனை மற்றும் தேவையான இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். உயர் சிகிச்சை தேவைப்படும் பொது மக்களுக்கு மருத்துவ பரிந்துரை வழங்கப்படும். இம்முகாமில் குழந்தை நல மருத்துவர், பல் மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், இருதய நோய் மருத்துவர், நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர், புற்று நோய் மருத்துவர், காசநோய் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், சித்த மற்றும் இந்திய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பு மருத்துவர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்கப்படுவார்கள். 

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் வருடத்திற்கு ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் 8 மருத்துவ வட்டாரங்களில் மொத்தம் 24 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், குடல் மருத்துவம், இயன்முறை மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், இருதய நோய் மருத்துவம், கண் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், சித்த மருத்துவம் (Ayush), நரம்பியல் மருத்துவம், முதியோர் நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன.

இம்முகாமின் போது சித்த மருத்துவ பல்துறை கண்காட்சி மற்றும் மாண்புமிகு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட விளக்க கண்காட்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் செயல்படும். இம்முகாம்கள் மூலம் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே ஆரம்ப நிலையிலேயே தங்கள் நோய்களுக்கான சிகிச்சையும், ஆலோசனைகளையும் பெற ஏதுவாகும். இந்த அரிய வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி கொண்டு நோய் வரும் முன் காத்திட தங்களை இம்மருத்துவ முகாமில் இலவசமாக பரிசோதனை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி  தெரிவித்தார்.

இம்முகாமில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.சௌண்டம்மாள், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பி.சுப்பிரமணி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.இராஜராஜன், தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மகாலிங்கம், தருமபுரி வட்டார மருத்துவ அலுவலர் மரு.சரஸ்குமார், கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கலைவாணி, ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.ராஜலிங்கம்‌உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments