Breaking News

அரிசி பொது விநியோகத் திட்டம் தொடரும்-தமிழக அரசு

சென்னை, அக்.13-

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தொடர்ந்து செயல்படும், பொது விநியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றது. பொது மக்கள் நம்ப வேண்டாம் என தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி பொது விநியோகம் குறித்து  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு விவரம் வருமாறு:

தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் நிலையில் சமீப காலமாக சமூக ஊடகங்கள் சிலவற்றில் ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும் ஆண்டு வருமானம் ரூபாய் 1 இலட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பொது விநியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

அனைவரும் பாராட்டும் வண்ணம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது என்றும் இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத்திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டதத்தின் பலன்களை அடையலாம் என தெளிவு படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிவரும் இது குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments