வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு
சென்னை:
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை சேர்த்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோரது வீடுகளில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய 2 இடங்களில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோடு, சேத்துப்பட்டு ஹாரிங்டன்ரோடு ஆகிய 2 இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. இந்த 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையொட்டி அடுக்குமாடி குடியிருப்பு முன்பு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர்கள், உறவினர்கள் ஆகியோரது வீடுகளிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
விஜயபாஸ்கரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகும். அமைச்சராக இருந்த காலத்தில் அவர் தனது சொந்த மாவட்டமான புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை வாங்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஜயபாஸ்கரின் சகோதரர் நடத்தி வரும் மதர் தெரசா அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதர் தெரசா பாலிடெக்னிக், கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, கொரோனா கால கட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் 43 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகிறார்கள். விஜயபாஸ்கரின் சொந்த ஊரான இலுப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 29 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, மதர் தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல் குவாரி, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சேட் என்ற அப்துல் ரகுமான் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமான வீடு, கிராப்பட்டி பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் குருபாலன் வீடு ஆகிய இடங்களிலும் சோதனை தொடர்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டில் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு மற்றும் மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் அஜய்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. அஜய்குமார் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ராமநாதபுரம் எஸ்.என்.வி. கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். கூடுதல் டி.எஸ்.பி. திவ்யா தலைமையில் 8 பேர் கொண்ட போலீஸார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அனைத்து இடங்களிலும் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேத்துப்பட்டில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
43 இடங்களில் இன்று நடைபெற்ற சோதனையில் நூற்றுக்கணக்கான லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடங்களிலும் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்று நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தனது வேட்புமனு தாக்கல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ. 6 கோடி 44 லட்சத்து 91 ஆயிரத்து 310 என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு ஆய்வில் அவர் சொத்து பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. 1.4.2016 முதல் 31.3.2021 வரையில் அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜயபாஸ்கர் பெயர் முதலாவதாகவும், ரம்யாவின் பெயர் 2-வதாகவும் இடம் பெற்றுள்ளது.
விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலத்தில் தனது பெயரிலும், மனைவி, மகள்கள் பெயரிலும் அதிகளவில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் விராலி மலை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு ரூ.27 கோடிக்கு மேல் சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் விஜயபாஸ்கர் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபிள்யூ கார் ஆகியவற்றை வாங்கி இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ காரின் மதிப்பு ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்து 156 என குறிப்பிடப்பட்டுள்ளது.
டிப்பர் லாரி உள்பட லாரிகளில் மதிப்பு ரூ.6 கோடியே 58 லட்சத்து 78 ஆயிரத்து 456 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 85.12 பவுன் தங்க நகைகளை விஜயபாஸ்கர் குடும்பத்தினர் வாங்கி இருப்பதாகவும் இதன் மதிப்பு ரூ. 40 லட்சத்து 58 ஆயிரத்து 975 எனவும் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் மொரப்பாக்கம் மற்றும் சில்லாவட்டம் பகுதிகளில் ரூ.3 கோடியே 99 லட்சத்து 5 ஆயிரத்து 400 மதிப்பில் விவசாய நிலங்கள் உள்ளதாகவும், சென்னையில் பகீரதி அம்மாள் தெருவில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ.14 கோடியே 57 லட்சத்து 65 ஆயிரம் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தற்போது விஜயபாஸ்கரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.58 கோடியே 64 லட்சத்து 25 ஆயிரத்து 887 என்பது தெரிய வந்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிகாலை துவங்கிய விசாரணை இன்னும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இந்த ரெய்டு இன்று இரவு வரை தொடரலாம் எனக்கூறப்படுகின்றது.
இந்த ரெய்டின் இறுதியில் கைப்பற்றப்படும் ஆவணங்கள், ரொக்கங்கள், தங்கம் உள்ளிட்டவைகளின் மதிப்பு இன்று இரவு வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



No comments
Thank you for your comments