ஈரோட்டில் நடத்தப்பட்ட டாஸ்மாக் ரெய்டு அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தொடருமா?.....
ஈரோடு:
பொதுவாகவே ஈரோடு மாவட்டத்தில் சில டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக குடிமகன்கள் இடையே ஒரு சலசலப்பு நிலவி வந்தது.
இதனிடையே இது குறித்து சிலர் புகாரளித்ததன் விளைவாக ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள எலைட் எனப்படும் உயர்தர மதுபானங்கள் விற்பனை செய்யும் கடையில் சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த தீவிர சோதனையில் மதுவிற்பனை மற்றும் அதற்கான தொகை கணக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக தொகை உள்ளது கண்டறியப்பட்டது. இச்சோதனை கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்தது.
இது தொடர்பாக மூன்று டாஸ்மாக் ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த விசாரணையின்போது ஒரு டைரி சிக்கியதாகவும் அதில் மேலதிகாரிகளுக்கு தினமும் எவ்வளவு பணம் கொடுக்கப்படுகிறது போன்ற தகவல்கள் உள்ளதாக பேசப்படுகிறது.
டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்த தகவல்களை மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த மூன்று நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் இதுபோலவே ஈரோட்டின் மற்ற டாஸ்மாக் கடைகளிலும் சோதனையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என ஈரோடு 'குடி'மகன்கள் பேசி வருகின்றனர்.

No comments
Thank you for your comments