Breaking News

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று முதல் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடக்கம்

சென்னை:  

அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதனடிப்படையில்,  தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று முதல் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகை 04-11-2021ம் தேதி அன்று (வியாழக்கிழமை) வருகிறது. அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும். இதனால் சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்தவர்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவது உண்டு. இதற்காக பலர் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிலர் சிறப்பு ரயில்கள் அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள்.

இதேபோல் அரசு விரைவு பஸ்களிலும் முன்பதிவு செய்து சொந்த ஊர்களுக்கு செல்ல பலர் காத்திருக்கிறார்கள். அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

அந்த வகையில் அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம், திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு பஸ்களும் படுக்கை வசதி கொண்ட பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரி கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4ம் தேதி வருவதையொட்டி வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன. இந்த மாதம் 29ம் தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் விடலாமா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழக்கமாக தென் மாவட்டங்களுக்கு அதிகமாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உண்டு. அதேபோல் இந்த ஆண்டும் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments