வாலாஜாபாத் அருகே 16ம் நூற்றாண்டை சார்ந்த சதி கற்கள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்திலுள்ளது உள்ளாவூர் கிராமம். இக்கிராமத்தில் 16 ம் நூற்றாண்டை சார்ந்த விஜயநகர மன்னர்கள்காலத்தை சார்ந்த நான்கு சதி கற்களும் உடைந்த நிலையில் ஒரு சிலையையும் உத்தரமேரூர் ஆய்வு மையத்தின் தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் அஜய்குமார் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதில் மூன்று சதி கற்களில் ஒரு பெண் ஒரு ஆண் உருவமும் நான்காவது சதிகளில் ஒரு ஆண் மூன்று பெண் உருவங்களும் உள்ளன.
இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது..
காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டிற்க்கு செல்லும் வழியில் உள்ளது உள்ள உள்ளாவூர் கிராமம். இக்கிராமத்தில் தீப்பாஞ்சி அம்மன் என்ற ஆலயம் 50 ஆண்டுகள் வழிபாட்டில் இல்லாமல் புதர்கள் மண்டி பாழடைந்து இருந்தது இதை உள்ளூர் இளைஞர்கள் உதவியுடன் சீரமைத்து பார்த்த பொழுது மேற்கண்ட சதி கற்களைளை கண்டறிந்தோம். இவற்றில் சில கற்கள் மண்ணில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்டன. அவற்றை சுத்தம் செய்து வைத்துள்ளோம்.
சதிக்கல் என்பது தமிழர் வாழ்வில் பன்னெடுங்காலமாக ஒரு பண்பாட்டின் ஓர் அங்கமாகவும் அடையாளமாகவுமே இருந்துள்ளது. இது குறித்த தகவல்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் நமக்கு கிடைக்கின்றன.
ஆநிறைக்கூட்டங்கள் எனப்படும் கால்நடை கூட்டங்களை கவரும் பொழுதோ தன் இனத்தை காக்கவோ ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ மண்னை காக்கவோ மன்னனை காக்கவோ நடைபெறும் போர்களில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்தால் இறந்த அவ் வீரனின் உடலை வைத்து திருவிழா போன்று ஊரே கூடி நிற்கும் அவர்கள் முன்னிலையில் இறந்த உடலுக்கு தீ மூட்டி சடங்கு சம்பிரதாயங்கள் செய்து அவ்வீரனின் மனைவியும் தீயில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வாள் இந்தப் பழக்கத்திற்கு சதி பழக்கம் என்று பெயர்.
இறந்த அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்கள் உருவம் பொதித்த கற்களை உருவாக்கி ஊர் பொது வெளியில் நட்டுவைத்து போற்றி வழிபடுவார்கள் இதற்கு சதிகல் வழிபாடு என்று பெயர்.
நாங்கள் கண்டறிந்த இந்த சதிகளில் மூன்று சதி கற்கள் கணவன் மனைவியும் ஒரு சதிக்கல்லில்களில் ஒரு கணவன் 3 மனைவிமார்களும் உள்ளார்கள்.
தீயில் பாய்ந்து உயிரை விட்ட அப்பெண்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களை இறைவனாக பெண்தெய்வமாக அம்மனாக நினைத்து இம் மக்கள் வழிபட ஆரம்பித்தார்கள். எனவே இதை தீப்பாஞ்சி அம்மன் என்று பெயர் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.
ஒரே இடத்தில் இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட சதி கற்கள் இருப்பதால் இந்த கிராமத்தில் விஜய நகர மன்னர்கள் காலத்தில் இப்பழக்கம் அதிகமாக பின்பற்றப்பட்டுள்ளது என்பதையும் இதைப் பின்பற்றுபவர்கள் இங்கு அதிகமாக வசித்து இருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது..
மேலும் ஒரு சதி கல்லில் ஒரு ஆண் உருவமும் அவருடன் மூன்று பெண் உருவமும் உள்ளது அந்த ஆண் சிற்பத்தின் அங்க அமைப்புக்கள் ஆடை அணிகலன்கள் இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது அவர் ஓர் குறுநில மன்னராகவோ அல்லது படைத்தளபதியாகவோ அல்லது முக்கிய பொறுப்பில் இருந்திருக்க வேண்டும் என்பதையும் அவருக்கு மூன்று மனைவிமார்கள் இருந்துள்ளார்கள் என்பதையும் அறிய முடிகிறது.
மூன்று சதி கற்கள் ஒன்றரை அடி உயரம் ஒன்றரை அடி அகலமும் ஒரு சிக்கலானது ஒன்றரை அடி உயரத்தில் மூன்று அடி நீளத்தில் காணப்படுகிறது மேலும் ஒரு சிலை அதனருகில் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சதிகளில் உள்ள ஒவ்வொரு சிற்பமும் அழகிய ஆடை அணிகலன்கள் ஆபரணங்கள் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றன
இது 500 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூர் விஜயநகர மன்னர் காலத்தில் ஒரு முக்கிய ஊராக இருந்தது என்பதையும் அந்த கால சமூக மக்களின் வாழ்வை பிரதிபலிக்கக்கூடிய ஒரு அம்சமாகவே கருதவேண்டியுள்ளது.
கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இதுபோன்ற வரலாற்று ஆவணங்களை காப்பது காலத்தின் கட்டாயம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்





No comments
Thank you for your comments