1200 கோடி ரூபாய் முதலீட்டில்“ பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா”
சென்னை
திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் “பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா” (Multi-Modal Logistics Park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியிலிருந்து மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரி, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இன்று (12-10-2021) காணொலி காட்சி மூலம் கையெழுத்தானது.
புதுடில்லியிலிருந்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் ஜெயராம் கட்கரி, ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் மற்றும் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜென்ரல் வி.கே. சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் இன்று (12.10.2021) தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக ஆகியோர் முன்னிலையிலும், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் National Highway Logistics Management Ltd., சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் 1200 கோடி ரூபாய் முதலீட்டில் “பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா” (Multi-Modal Logistics Park) தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களே!
மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களே!
மாண்புமிகு ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் ஜெனரல். வி.கே. சிங் அவர்களே!
மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களே!
தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு அவர்களே!
ஒன்றிய அரசின் செயலாளர்களே! மற்றும் உயர் அலுவலர்களே!
பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா திட்ட விழாவில் பங்கெடுத்துள்ள ஒன்றிய அமைச்சர்களான மாண்புமிகு நிதின் கட்கரி அவர்களுக்கும் மாண்புமிகு சர்பானந்த சோனோவால் அவர்களுக்கும் மாண்புமிகு வி.கே. சிங் அவர்களுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது பல்வேறு பணிகளுக்கு இடையில் இந்த நிகழ்வில் நீங்கள் பங்கெடுத்துள்ளீர்கள்.
தமிழக தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் ஆகும். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது உண்மையில் மகிழ்ச்சி அளிப்பது ஆகும்.
தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பூங்கா அமையும் பகுதி மிக மிக முக்கியமான தொழில் பகுதியாக இருக்கிறது என்பதை உங்கள் அனைவருக்கும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள திருபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமையப் போகிறது.
இந்த பூங்கா சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு (CPRR) மிக அருகில் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை சிறப்பான முறையில் இணைக்க வழிவகை செய்கிறது. அனைத்து வசதிகளும் கொண்ட இடத்தில் அமைய இருக்கிறது. அதே போல், உலகத் தரம் வாய்ந்த வசதிகளும் இதில் இருக்கின்றன.
* இரயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம்,
* சேமிப்புக் கிடங்கு,
* குளிர்பதன சேமிப்புக் கிடங்கு,
* இயந்திரங்கள் மூலம் சரக்குகளைக் கையாளுதல்
* மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.
இதன் மூலம், சரக்குப் போக்குவரத்துச் செலவு கணிசமான அளவில் குறையும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். சரக்குப் போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை நாங்கள் செய்யத் தொடங்கி இருக்கிறோம். சரக்குப் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில், 'தமிழ்நாடு மாநில சரக்குப் போக்குவரத்திற்கான திட்டத்தை' தயாரிக்கும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது என்பதைப் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென, டிட்கோ (TIDCO) சார்பில் ஒரு ஆலோசகரை நியமித்துள்ளது. தமிழ்நாடு அரசு, இத்திட்டத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது.
இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்கா திட்டத்தை ஒன்றிய அரசு - தமிழ்நாடு அரசின் துணையுடனும் பொது மற்றும் தனியாருடன் இணைந்தும் தொடங்குவதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்; நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
டிட்கோ, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவை இணைந்து செயல்படுத்தும் இந்த புதுமையான முயற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 10,000 இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழ்நாட்டில் சரக்குப் போக்குவரத்துத் துறைக்கு உதவ வேண்டுமென மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்:
* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வரும், பெங்களூரு - சென்னை விரைவுச் சாலை, திருபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்தைத் துரிதப்படுத்தவும், போக்குவரத்துச் செலவைக் குறைக்கவும், இந்த விரைவுச் சாலையை, சென்னை சர்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.
* கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் இதுபோன்ற பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைக்கப்படவேண்டும். இதற்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பைத் தரும் என நான் உறுதி அளிக்கிறேன்.
* இப்போது அமைய உள்ள பல்முனையப் சரக்கு போக்குவரத்துப் பூங்காவில், இரயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத் தர வேண்டும் என மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவற்றை விரைந்து வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. இந்தத் திட்டத்தினை தமிழ்நாட்டிற்கு வழங்கியமைக்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி, எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்! இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.
இந்நிகழ்வின்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, தொழில்துறை முதன்மைச் செயலாளர் என். முருகானந்தம், சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், டிட்கோ செயல் இயக்குநர் வந்தனா கார்க், NHLML முதன்மை செயல் அலுவலர் பிரகாஷ் கவுர், NHAI சென்னை மண்டல அலுவலர் எஸ்.பி. சோமசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments
Thank you for your comments